வழமைக்கு திரும்பிய கண் புரை அறுவை சிகிச்சைகள்

52

நாட்டில் தற்போது வைத்தியசாலை அமைப்பில் கண் புரை அறுவை சிகிச்சைக்கள் வழமைப்போல மேற்கொள்ளப்படுவதாகவும் இதில் எந்தவிதமான ஆபத்துக்களும் இல்லை எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் வரையில் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான கண் வில்லைகளை மருத்துவ வழங்கற் பிரிவு விநியோகித்துள்ளதாக மருத்துவ வழங்கற் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டில் உள்ள வைத்தியசாலை அமைப்பில் கண் வில்லைகளுக்கு தட்டுப்பாடு இல்லை.

தேவையான சத்திரசிகிச்சைகள் வழமை போன்று தற்போது இடம்பெற்று வருகின்றன. கடந்த மே மாதம் 6 மாதங்களுக்கு தேவையான கண் வில்லைகளை மருத்துவ வழங்கற் பிரிவு வைத்தியசாலைகளுக்கு விநியோகித்தது.

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மாதமொன்றுக்கு சுமார் 10,000 கண் புரை சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதன் வருடாந்த தேவை ஒரு இலட்சம். கடந்த மே மாதத்தில், அனைத்து அடிப்படை கண் வைத்திய நிபுணர்கள் முதல் பிரதான வைத்தியசாலைகள் வரை சுமார் ஆறு மாதங்களுக்கான தேவைகள் மருத்துவ வழங்கற் பிரிவில் இருந்து பெறப்பட்டு அந்த வைத்தியசாலைகளுக்கு மருத்துவ வழங்கல் பிரிவினால் விநியோகிக்கப்பட்டது.

வைத்தியசாலைகளில் ஏற்கனவே எதிர்வரும் நவம்பர் மாதம் வரை போதுமான கண் வில்லைகள் காணப்படுகின்றன.

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு தேவையான அளவு மருத்துவ வழங்கற் பிரிவிடம் உள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக ஆறு மாதங்களின் தேவை அறியப்பட்ட நிலையில் அவை ஏற்கனவே வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. தற்போது கண் வில்லைகள் பரந்த அளவில் கிடைத்துள்ளது.

தற்போது இலங்கையில் 18.5 முதல் 26 வரையிலான வில்லைகள் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த அளவிலான கண் வில்லைகள் தற்போது நாட்டின் அனைத்து வைத்தியசாலையிலும் காணப்படுகிறது.

ஏதேனும் வைத்தியசாலைகளில் பற்றாக்குறை இருந்தால், அவற்றை மருத்துவ விநியோகத் துறையில் பெறலாம்.

அதன்படி, கண் வில்லைகள் பற்றாக்குறை காரணமாக தற்போது எந்த வைத்தியசாலையிலும் கண் புரை அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்படவில்லை” என அவர் வலியுறுத்தினார்.

Join Our WhatsApp Group