பொதுப்போக்குவரத்து சேவையில் பயணச்சீட்டுக்குப் பதிலாக இலத்திரனியல் அட்டை அறிமுகம் – பந்துல

56

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் இரயில்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு மாறாக இலத்திரனியல் அட்டை (Digital Cards) விரைவில் அறிமுகம் செய்யப்படும் என நம்புவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதிக செலவுகள், ஊழியர்களின் பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்கள் காரணமாக அரசாங்கத்திற்கு சொந்தமான பயணிகள் போக்குவரத்து சேவைகள் நட்டமைடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முறைகேடு மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு இரயில் மற்றும் பேருந்து பயணச்சீட்டுகள் வழங்கும் முறைமை இலத்திரனியல் மயமாக்கப்பட்ட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஐந்து ஆண்டுகளில் கீழ் நிலை ஊழியர்கள் அடுத்தக் கட்டத்திற்கு அனுமதிக்கப்படும் நிலையில், இரயில்வே துறையில் காணப்படும் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரயில்வே துறையினை அதிகாரசபையாக மாற்றுவதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவின் அறிக்கையின் பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp Group