பிள்ளையான், ராஜபக்சர்கள் உடன் கைதுசெய்யப்பட வேண்டும்; பாராளுமன்றில் கோரிக்கை

32

ராஜபக்சர்கள் மற்றும் பிள்ளையான் போன்றவர்கள் உடன் கைதுசெய்யப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் இவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இந்த கேரிக்கையினை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய ஊடகமான செனல் 4 ஊடாக வெளியான தகவல் சாதாரணமான விடயமல்ல.

அதன் சூத்திரதாரியாக கிழக்கு மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை காட்டிக்கொடுத்த பிள்ளையான் இருக்கின்றார்.

பிள்ளையான் இலங்கை இராணுவத்துடன் இணைந்து 2009 ஆம் ஆண்டுவரை தமிழர்கள் பலர் கொல்லப்படுவதற்கும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்படுவதற்கும் காரணமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரங்கேற்றி அந்த பழியை முஸ்லிம் மக்கள் மீது சுமத்தியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றிய முஸ்லிம் சமூகத்தை ஒரே நாளில் குற்றவாளியாக்கி, அவர்களின் பொருளாதாரத்தை அழித்துள்ளனர்.

சிங்கள மக்களை முஸ்லிம் மக்களுக்கு எதிராக திருப்பியிருந்தனர். இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்குகளை பெற்றுக்கொண்டார்கள் என்பது யாவரும் அறிந்த ஒன்றே.

சிங்கள மக்கள் ஒன்றை நிதானமாக சிந்திக்க வேண்டும். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ள முடியாத இராணுவத்தினர் சிங்கள மக்கள், பிக்குகள் பயணித்த பேருந்தில் குண்டு வைத்தனர்.

இதன் மூலம் சிங்கள மக்களை தமிழ் மக்களுக்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் கோபப்பட வைத்து ஒரு இன அழிப்பை மேற்கொள்வதற்கு ராஜபக்சர்கள் சதி செய்தனர்.

இதனை சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாக மட்டுமே வெளிக்கொண்டு வர முடியும். இந்நிலையில், பிள்ளையான் போன்றவர்கள், ராஜபக்சர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும்.

அவர்களுக்கு எதிராக சர்தேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(நன்றி-ஒருவன்)

Join Our WhatsApp Group