மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரியும் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளிக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய இழப்பீட்டை (ரூ.6.8 மில்லியன்) பெற்ற இலங்கைப் பெண், குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை (3) வந்தடைந்தார். மஹியங்கனையில் வசிக்கும் 32 வயதுடைய பெண், குவைத்தில் தனது முதலாளியின் மகனால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனால், அவர் கர்ப்பமானார். பின்னர், அவரது முதலாளி ஒரு மருத்துவரை ரகசியமாக வீட்டிற்கு அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தார். மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். எனினும், கருக்கலைப்புக்குப் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவரது முதலாளி அவளை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று இலங்கைக்கு திரும்புவதற்கு விமான டிக்கெட்டை வழங்கியுள்ளார். இதற்கிடையில், அவரது உடல்நிலை காரணமாக விமானத்தில் அழைத்துச் செல்ல விமான அதிகாரிகள் மறுத்துவிட்டனர், பின்னர் இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இலங்கைத் தூதரகம் குவைத்தில் உள்ள முதலாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கையை தாக்கல் செய்திருந்தது, நீண்ட சட்டப் போராட்டத்தின் பின்னர், நீதிமன்றம் அவருக்கு நஷ்டஈட்டை வழங்கியது.