மலேசிய கடவுச்சீட்டில் ஜோர்தான் செல்ல முயற்சித்த இலங்கை இளைஞன் கைது

19

போலி ஆவணங்களை சமர்ப்பித்து மலேசிய அதிகாரிகளை ஏமாற்றி அந்நாட்டு கடவுச்சீட்டை பெற்று அதனை பயன்படுத்தி ஜோர்தானுக்கு செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த இளைஞர் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் சந்தேக நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வேலணை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் நேற்று அதிகாலை 3.30 அளவில் எயார் அரேபியா விமானத்தில் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் ஊடாக ஜோர்தான் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

சந்தேக நபர் விமானத்தில் ஏறுவதற்காக எயார் அரேபியா விமான சேவையின் கருமப்பீடத்தில் வழங்கிய கடவுச்சீட்டு உட்பட ஆவணங்கள் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, அதிகாரிகள் அவரை குடிவரவு, குடியகல்வு எல்லை கண்காணிப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதிகாரிகள், இளைஞனிடம் நடத்திய விசாரணைகளில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மலேசிய கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டமை தெரியவந்துள்ளது.

இதனை சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Join Our WhatsApp Group