ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் மின் சிகரெட்டுகளைத் தடை செய்ய பிரான்ஸ் திட்டம்

15

ஒருமுறை பயன்படுத்தி விட்டுத் தூக்கி வீசப்படும் புதுவகை மின் சிகரெட்டுகளைத் தடை செய்ய பிரான்ஸ் திட்டமிடுகிறது.அந்தத் தகவலை பிரெஞ்சுப் பிரதமர் எலிசபெத் போர்ன் (Elisabeth Borne) வானொலி நிகழ்ச்சியொன்றில் அறிவித்தார்.

“இது ஒரு முக்கியமான பொதுச் சுகாதாரப் பிரச்சினை” என்று திருவாட்டி போர்ன் சொன்னார்.பிரான்ஸில் ஆண்டுதோறும் பதிவாகும் மரணங்களில் 75,000 புகையிலைப் பயன்பாட்டினால் நேர்வது என்பதை அவர் சுட்டினார்.இந்தப் பிரச்சினையைக் களைய தேசிய அளவில் திட்டமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளதாய் அவர் கூறினார்.

“puff” என்றழைக்கப்படும் ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசப்படும் புதுவகை மின் சிகரெட்டுகளைப் பயன்படுத்தும் இளையர்கள் நாளடைவில் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாக வாய்ப்பிருப்பதைத் திருவாட்டி போர்ன் சுட்டினார்.எனினும், புகையிலைக்கான வரி இந்த ஆண்டுதான் (2023) உயர்த்தப்பட்டிருப்பதால் அடுத்த ஆண்டு (2024) அதனை அதிகரிக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்றார் அவர்.

புகையிலை, மதுபானம் ஆகியவற்றைக் குறைக்கும் முயற்சியைக் கடந்த 2021இல் பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோன் (Emmanuel Macron) அறிவித்தார்.சிகரெட் புகைக்கக் கூடாத இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, 2030ஆம் ஆண்டுக்குள் 20 வயது இளையர்கள் அனைவரும் புகையிலைப் பயன்பாட்டில் இருந்து விடுபட்டவர்களாக இருக்க வேண்டும் என்பது அவரது இலக்கு.

Join Our WhatsApp Group