இந்தியரை அவமதிக்கும் இனவெறி பேச்சு; ரியல் எஸ்டேட் உரிமம் பறிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பெண்

19

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது மேவின் ரியல் எஸ்டேட் எனும் நிறுவனம்

அழகான ஆஸ்திரேலியாவை இந்தியாவை போன்று சுகாதாரமற்று மாற்றி விடாதீர்கள்.

ஆஸ்திரேலியாவில் பணிபுரிய தனியாகவோ அல்லது குடும்பத்துடனோ செல்லும் இந்தியர்களுக்கு வாடகைக்கு நல்ல வசிப்பிடங்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.

இதனால் இவர்களுக்கு உதவுவதற்கு ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன. இவை அந்நாட்டு சட்டதிட்டங்களின்படி உரிமம் பெற்று இயங்க வேண்டும்.

அவற்றில் ஒன்று, மேற்கு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பார்க் பகுதியில் உள்ளது மேவின் ரியல் எஸ்டேட் எனும் நிறுவனம். இதன் இயக்குனர் ப்ரான்வின் பாலிட் எனும் பெண்மணி.

சில வருடங்களுக்கு முன், இவர் மூலமாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியவர் இந்தியாவை சேர்ந்த சந்தீப் குமார். அப்போது இவரது முன்பணத்தில் இருந்து சுத்தம் மற்றும் சுகாதார செலவுக்கான கட்டணங்கள் என குறிப்பிட்டு ஒரு தொகையை ப்ரான்வின் பிடித்தம் செய்திருந்தார். இதற்கு சந்தீப் எதிர்ப்பு தெரிவித்தார்.

இருவருக்கும் இது குறித்து மின்னஞ்சல் தொடர்பில் சச்சரவு தொடங்கியிருந்தது. 2021-இல் இது குறித்த வாக்குவாதத்தில் ப்ரான்வின், சந்தீப்பை இனரீதியாக விமர்சித்து அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்.

அதில் ப்ரான்வின் கூறியிருந்ததாவது, “நான் ஒரு வெள்ளை இன ஆஸ்திரேலிய பெண். உங்களை போலுள்ள பல இந்தியர்களும் நாங்கள் அனுபவிக்கும் தரமான ஆஸ்திரேலிய வாழ்க்கை முறையை அனுபவிக்கவே இங்கு வருகிறீர்கள். குறைவான மக்கள்தொகை, சுத்தமான காற்று, நல்ல சம்பளத்துடன் வேலை மட்டுமின்றி ஒரு வேளை வேலையில்லை என்றாலும் சமூக பாதுகாப்பு, மருத்துவ காப்பீடு போன்றவை இங்கு உங்களுக்கு கிடைக்கிறது.”
“கூட்டம் கூட்டமாக வரும் உங்கள் இந்தியர்களின் வருகையால் அழகான எங்கள் நாடு, உங்கள் இந்தியாவை போலவே நாடெங்கிலும் சாலைகளில் பிணங்கள், நதிகளில் பாதி எரிந்த பிணங்கள், சேரிகளில் வாழும் மக்கள், ஒருவர் மீது ஒருவர் ஏறி கும்பலில் சண்டையிட்டு பெறும் தரமற்ற மருத்துவ உதவி ஆகியவை அடங்கிய நாடாக மாற்றி விட மாட்டீர்கள் என நம்புகிறேன். நீங்கள் வீடு மாறி செல்லும் போது விட்டு செல்லும் நிலையை சுத்தம் செய்வது அவசியம். அதிலிருந்துதான் அனைத்தும் தொடங்குகிறது,” என்று இந்திய நாட்டையும், வாழ்க்கை முறையையும் விமர்சித்தார்.

இந்த மின்னஞ்சலை கண்ட சந்தீப் குமார், மேற்கு ஆஸ்திரேலியாவின் நிர்வாக தீர்ப்பாயத்திடம் இதை சமர்ப்பித்து புகார் அளித்தார். தனது தரப்பில், கோவிட் தொற்றுக்கான காலகட்டத்தில் தான் மிகவும் மனஅழுத்தத்தில் இருந்ததாக தீர்ப்பாயம் முன் ப்ரான்வின் கூறியிருந்தார்.

ப்ரான்வில் வேறொரு மின்னஞ்சலில், “நான் இனவெறியுடன் பேசவில்லை. அவ்வாறு தோன்றினால் என்னை மன்னியுங்கள்” எனவும் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புகாரை முழுவதும் விசாரித்த தீர்ப்பாயம், செப்டம்பர் 1-இல் இருந்து 8 மாதங்களுக்கு ப்ரான்வின்னுக்கு அளிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக உத்தரவிட்டது.

Join Our WhatsApp Group