மக்களுக்கு சுத்தமான, குடிநீரை பெற்றுக் கொடுப்பதே இலக்கு – அமைச்சர் ஜீவன்

26

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பு அமைச்சில் நடைபெற்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கை அடிப்படையிலான கடன் திட்டத்தின் கீழ், அரச மறுசீரமைப்பு திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற நிலை குறித்து இதன்போது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய காலக்கெடு பற்றியும் அமைச்சர் விவரித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கை திட்டங்கள், இலங்கையின் தற்போதைய நீர்த்துறை மறுசீரமைப்பில் முக்கிய வகிபாகத்தை வகிக்கின்றது.

நீர் முகாமைத்துவம், தடையற்ற நீர் விநியோகம் உள்ளிட்டவற்றை இத்திட்டம் ஊக்குவிப்பதுடன், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட மூலோபாய நகர்வுகளையும் திட்டம் உள்ளடக்கியுள்ளது. இலங்கை மக்களுக்கு சுத்தமான, சுகாதார பாதுகாப்புமிக்க குடிநீரை பெற்றுக்கொடுப்பதே இதன் இலக்காகும்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான மேற்படி சந்திப்பில், மேற்படி கொள்கை நடவடிக்கைகளை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், நீண்டகால சுற்றாடல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்புடன் இந்த சீர்திருத்தங்கள் எவ்வாறு இணைந்துள்ளன என்பன பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது.

சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பை இதன்போது அமைச்சர் வெளிப்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்த சீர்திருத்தங்கள் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தையும் பட்டியலிட்டுள்ளார்.

மேற்படி இலக்குகளை அடைவதற்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் முன்னெடுக்கப்படும் நகர்வுகளுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Join Our WhatsApp Group