நாளை சூரியனை நோக்கி பயணிக்க தயாராகும் ஆதித்யா எல் 1

30

சந்திரயான்3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்தில் நிறுத்தி வெற்றி கண்ட இந்திய விஞ்ஞானிகள் தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்கு ஆதித்யா எல் 1 விண்கலத்தை அனுப்ப தயாராகி உள்ளனர். இதன்படி குறித்த விண்கலத்தை அனுப்புவதற்கான கவுண்டவுன் இன்றுமுதல் தொடங்க உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

நாளை (02) காலை 11.50 மணிக்கு ஆதித்யா எல் 1 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி57 ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது.

பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனைக் கண்காணிக்கவும் சூரியக் காற்று (solar wind) போன்ற விண்வெளி வானிலை அம்சங்களை ஆய்வு செய்யவும் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகத்தை தொடங்குவதே இந்தத் திட்டம்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசுகையில், சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலம் நாளை விண்ணில் ஏவப்பட இருக்கும் நிலையில், அதற்கான ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

ஆதித்யா எல்1 விண்கலம் நான்கு மாதங்கள் பயணம் செய்து 15 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரேஞ்ச் புள்ளியை அடையும். அதன்பிறகு தொடர்ந்து சூரியன் குறித்த ஆய்வுகளை ஆதித்யா எல்1 மிஷன் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது

ராக்கெட் ஏவும் காலங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு குறிப்பிட்ட கடல் பகுதிக்குள் மீனவர்கள் தொழிலுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

அதன்படி இன்று மாலை முதல் நாளை வரை பழவேற்காடு மீனவர்கள் யாரும், கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவ கூட்டுறவு சங்கங்கள் மூலம், திருவள்ளூர் மாவட்ட மீன்வளத்துறையினர் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

Join Our WhatsApp Group