நாமலின் மின்கட்டணம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனு

29

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீரகெட்டியவில் உள்ள வீட்டிற்கு மின்சாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கணக்காய்வாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்வின் போது அவரது வீட்டிற்கு இந்த மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஈ.ஜே.விஜித குமார என்ற சட்டத்தரணியினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக இலங்கை மின்சார சபை, அதன் தலைவர் என்.எஸ்.இளங்ககோன், முன்னாள் தலைவர் ரகித ஜயவர்தன, கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.வி.சானக்க உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வு 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை வீரகெட்டியவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்றதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்காக பெறப்பட்ட மின்சாரத்திற்கு 2,682,246.57 ரூபாய் அறிவிடப்பட வேண்டும் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

திருமண நிகழ்வு நடைபெற்ற செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அந்த வீட்டுக்கும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாதுகாப்பான மின் விளக்குகளை வழங்குமாறு மின்சக்தி அமைச்சரிடம் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க கோரிக்கை விடுத்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், அப்பகுதிக்கு மின்சாரம் வழங்குமாறு அப்போதைய மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர், மின்சார சபை அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும், அது தொடர்பான கொடுப்பனவுகளை குடும்ப உறுப்பினர்கள் செலுத்தத் தயாராக இருந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அந்தத் தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என்றும், பிரதிவாதிகள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மின்சாரத்தைப் பெற்றதாகவும், மின்கட்டணத்தைச் செலுத்தத் தவறிவிட்டதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இருந்த போதிலும், மாதாந்திர மின்கட்டணமான 7,390 ரூபாயை செலுத்தாததால் தனது வீட்டில் மின்சார சபை மின்சாரத்தை துண்டித்ததாக கூறும் மனுதாரர், பெருமளவான மின்கட்டணம் செலுத்தப்படாத நிலையில் வீரகெட்டிய வீட்டில் மின்சாரத்தை துண்டிக்காது தமது வீட்டில் மின்சாரத்தை துண்டித்தமை சட்டத்தின் பார்வையில் முற்றிலும் சட்டவிரோதமானது என குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஊடாக அரசியலமைப்புச் சட்டத்தின் 12(1) பிரிவின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரர், நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

மேலும், 2019 செப்டெம்பர் 12ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை மகிந்த ராஜபக்சவின் வீரகெட்டிய வீட்டுக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பான ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.

அத்துடன், அந்த வீட்டிற்கு மின்சாரம் வழங்கியதன் மூலம் இலங்கை மின்சார சபையின் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள், அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அறிவிக்குமாறு மனுதாரர் நீதிமன்றில் மேலும் கோரியுள்ளார்.

Join Our WhatsApp Group