தலங்கம துப்பாக்கி சூட்டு சம்பவம் : தப்பிச்சென்ற சந்தேக நபர் சிங்கப்பூரில் கைது

54

தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 44 வயதுடைய நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்ற பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை (ஆக. 25) மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கி சூட்டுக்கு உள்ளானவர் கடன் கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்டவர் என விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது.
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் பிரதேசத்தை விட்டு வெளியேறிய இருவரில், 23 வயதுடையவர் சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், நுகேகொட பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு (SSP) கிடைத்த இரகசிய தகவலையடுத்து, இவருக்கு எதிராக பயணத்தடையைப் பெறவும் நிலைமையை சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

சிங்கப்பூர் விமானத்தில் ஏறிய போதிலும், அவர் நாட்டில் தரையிறங்கியவுடன் கைது செய்யப்பட்டார். இதன் பின்னர், சிங்கப்பூர் அதிகாரிகளால் உடனடியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

அதுருகிரிய பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய இளைஞன், நேற்று (31) கட்டுநாயக்க விமான நிலையத்தில் திரும்பியவுடன் இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

“அதுருகிரியே லடியா” என்ற பெயரில் செயற்படும் கிரிமினல் கும்பல் ஒருவரின் உத்தரவின் பேரில் குறித்த இளைஞன் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் உத்தேசித்துள்ளனர்.

Join Our WhatsApp Group