குருந்தூர்மலை விவசாய நிலங்கள் விடுவிக்கப்படுவது தாமதமாகும் அறிகுறி

20

தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு குருந்தூர்மலை தண்ணிமுறிப்பு குளத்தின் நீரினால் விவசாயம் செய்யும் தமிழ் விவசாயிகளின் நிலங்கள் உள்ளிட்ட காணிகள் விடுவிப்பது மேலும் தாமதமாகும் என தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

“தற்போதைய நிலவரத்தை பார்க்கும்போது இந்த காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வாய்ப்பில்லை. இதற்கு மீண்டும் ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என அங்கிருந்த உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே ஜனாதிபதியிடம் இதுத் தொடர்பில் தெரிவித்து, எமது மக்களின் காணிகளை விடுவிக்க முயற்சிப்போம். இது உடனடியாக நடக்குமா என்பது சந்தேகமே.”

முல்லைத்தீவு, குருந்தூர்மலை, தண்ணிமுறிப்பு குளத்தின் நீரைக் கொண்டு விவசாயம் செய்யும் தமிழ் விவசாயிகளின் வயல் நிலங்களை தொல்பொருள் திணைக்களம் அபகரித்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை அடுத்து, இந்த வார ஆரம்பத்தில், அரச அதிகாரிகள், காணி உரிமையாளர்கள், பிரதேசவாசிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஒன்றாக அவதானிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிடுகையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் 16ஆம் திகதி முல்லைத்தீவில் இடம்பெற்ற காணிப்பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில்
எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, முல்லைத்தீவு மாவட்ட செயலக அதிகாரிகள், தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு, வனஜீவராசிகள், பிரதேச பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பிரதேச தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து இந்த கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டனர்.

குருந்தூர்மலை தொல்லியல் திணைக்கள பிரதேசத்தை, பல நூறு ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்தி, அந்த நிலத்தில் புதிய பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் செயற்பாடு மோதல் சூழ்நிலைக்கு வழிவகுத்தது.

தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஆங்கிலேயர்களால் வெளியிடப்பட்ட, 1933ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி வர்த்தமானியை காட்டி 78 ஏக்கர் நிலப்பரப்பு குருந்தூர்மலைக்கு சொந்தமானது என விளக்கமளித்ததாக கண்காணிப்புப் பயணத்தில் கலந்துகொண்ட உள்ளூர் தமிழர்கள் தெரிவிக்கின்றனர்.

Join Our WhatsApp Group