உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உதவி வழங்கிய குழு பற்றி பேராயர் மெல்கம் ரஞ்சித் தகவல்

44

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புக்கு தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான உதவிகளை வழங்கிய குழுவொன்று குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் ‘அபு ஹிந்த்’ என்ற தனிநபரோ அல்லது குழுவோ இருப்பதாக தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்தார்.

‘அபு ஹிந்த்’ தொடர்பான சாட்சியங்கள் வெளிப்படுத்தப்பட்டபோது, ​​ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்து நீதிபதிகளில் ஒருவர் அந்தப் பெயர் குறித்து சாட்சியிடம் கேள்வி எழுப்பியதாக அவர் மேலும் கூறினார்.

“ஊடகங்கள் இருப்பதால் பெயரை வெளியிட முடியாது என்று சாட்சி கூறியதாகவும், அதற்கு பதிலாக ஒரு பேப்பரில் பெயரை குறிப்பிட்டு வைத்திருந்ததாகவும்” மல்கம் கர்தினால் ரஞ்சித் கூறினார்.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய பேராயர், இது தொடர்பான தகவல்களை அறிய தமது குழுவினர் இந்த ஆவணங்களைத் தேடி வருவதாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளில் காணாமற்போன சில பகுதிகள் தொடர்பில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் கவலை வெளியிட்டார்.

2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான நீதியை தாமதப்படுத்தியதற்காக இலங்கை அரசாங்கத்தை அவர் மேலும் சாடினார்.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் ஏசுவின் பன்னிரு திருத்தூதர்களின் திருவுருவங்களை வைத்து ஆசிர்வாதம் பெறும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Join Our WhatsApp Group