13வது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி கடிதம் ஒன்றை வழங்கிய வீரவங்ஸ

19

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாடு பிரிவினைவாதத்தின் பொறியாக மாறும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ஸ தெரிவித்துள்ளார்.

நாடு பிரிவினைவாதத்தின் பொறியாக மாறும் ஆபத்து மற்றும் உண்மையாக தேசிய பிரச்சினையை தீர்க்கும் விதம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்சவிடம் வழங்கியுள்ள நீண்ட கடிதத்தில் வீரவங்ஸ இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் விமல் வீரவங்ஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸம்மில் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

13வது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதால், நாடு பிரிவினைவாதத்தை நோக்கி தள்ளப்படும் ஆபத்து குறித்து இவர்கள் கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இதனையடுத்து உண்மையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதம் தொடர்பாக எழுதிய கடிதத்தை வீரவங்ஸ, ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

விமல் வீரவங்ஸ உட்பட சிங்கள தேசியவாத கொள்கைகளை கொண்டுள்ள சிங்கள தேசியவாதிகள், 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட கூடாது எனவும் இவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

குறிப்பாக மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால், மாகாணங்களின் பொலிஸாரின் அனுமதியின்றி மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு துறையினருக்கு எவ்வித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது போகும் எனவும் இவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 1987 ஆம் ஆண்டு 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டு 36 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை அந்த சட்டத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை.

Join Our WhatsApp Group