பொகவந்தலாவை – கொட்டியாகலை தோட்டத்தில் நாடகம் ஒன்றை அரங்கேற்றுவதற்கு இராணுவம் மற்றும் தோட்ட நிர்வாகத்தின் ஊடாக தடை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி நாடகக் கலைஞரான இராசையா லோகானந்தனே இந்த முறைப்பாட்டைப் நேற்று (26) பதிவு செய்துள்ளார்.
கொட்டியாகலை தோட்டத்தில் கடந்த 09ஆம் திகதி, இராசையா லோகானந்தனின் நெறியாள்கையில் உருவாக்கப்பட்ட “லயத்துக் கோழிகள்” என்கிற நாடகத்தை பொதுமக்களுக்குக் காண்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது தொடர்பில் கொட்டியாகலை தோட்ட நிர்வாகத்தினருக்கும், பொகவந்தலாவைப் பொலிஸாருக்கும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த நாடகத்தை பொதுமக்களுக்கு இன்று காண்பிக்க வேண்டாம். இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்துக்கு எழுத்துமூலமாக அறிவிக்க வேண்டும். மேலும், இந்த நாடகத்தை அரங்கேற்றுவதற்கு இடமளிக்க வேண்டாம் என விசேட அதிரடிப்படையினர் எங்களிடம் கேட்கிறார்கள்.” என்று தோட்ட நிர்வாகத்தினர் லோகானந்தனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பில் மவுசாகலை இராணுவ முகாமிலிருந்து பேசுவதாகக் கூறி தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அதிகாரி ஒருவரும் லோகானந்தனிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
இவ்வாறான நிலையில், இச்சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.