தோனி என்டர்டெயின்மென்ட் சார்பில் கிரிக்கெட் வீரர் தோனி, சாக்ஷி தோனி இணைந்து தயாரித்துள்ள படம், ‘எல்ஜிஎம்’. நாளை திரைக்கு வரும் இதில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, ஆர்ஜே விஜய் நடித்துள்ளனர். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பேசிய சாக்ஷி ேதானியிடம், ‘தோனி ஹீரோவாக நடிக்கும் படத்தை தயாரிப்பீர்களா?’ என்று கேட்டபோது, ‘தோனிக்கு கேமரா முன்பு நிற்பது ஒன்றும் புதிதல்ல. நிறைய விளம்பரப் படங்களில் அவர் நடித்துள்ளார். அவருக்கும், தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும் நிறைய பந்தம் இருக்கிறது.
அதனால்தான் நாங்கள் படம் தயாரிக்க முடிவு செய்தபோது, முதலில் தமிழில் படம் தயாரிக்க முன்வந்தோம். எல்ஜிஎம் கதையை நான் எழுதினேன். குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்கள் தயாரிக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம்.
தோனியை ஹீரோவாக நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இருக்கிறது. அப்படி அவர் நடிக்க முன்வந்தால், அவருக்கு ஆக்ஷன் கதை பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து. அவருக்கும் நடிக்கும் எண்ணம் இருக்கிறது’ என்றார். முன்னதாக ஐதராபாத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சாக்ஷி தோனி, ‘நான் நடிகர் அல்லு அர்ஜூனின் தீவிர ரசிகை. அவரது எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன்’ என்றார்.