NEWS FEATURE: இனங்களை உசுப்பேத்தும் இலங்கை அரசியல்

37

-குணராசா ceylonsri

இலங்கை மீதான அண்மைக்கால கனடாவின் தலையீடுகள், புலம்பெயர் தமிழர்களை பலப்படுத்துவதாக அமைகிறதென்ற அச்சம் தென்னிலங்கையில் உணரச் செய்யப்பட்டுள்ளது. ஜுலைக் கலவரத்தின் நாற்பதாண்டு நினைவுகள் குறித்து கனடா வௌியிட்டுள்ள அறிக்கை குருந்தூர் மலை விவகாரம் மற்றும் மத்திய வங்கியின் குண்டுதாரிகள் இருவர் விடுதலை செய்யப்பட்டமை என்பவற்றை கடுமையாக விமர்சிக்கும் பௌத்த எம்.பிக்கள் சிலர், வழமைபோன்று சர்வதேசத்தின் கைப்பிள்ளையாக ரணிலை விமர்சிப்பதைக் காண முடிகிறது.

ராஜபக்‌ஷக்களின் இயலாமையே இந்நிலைமையை ஏற்படுத்தியுள்ளதா கவும் இந்த எம்.பிக்கள் கருத்துரைக்கின்றனர். அவசரமாக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு 22 ஆவது திருத்தத்தை கொண்டுவரும் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் இந்தக் கடும்போக்குகள் கர்ஜிக்கின்றன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொருத்தமான வேட்பாளரின்றி தலையைச் சொறியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இவ்வாறான பிரசாரங்கள் கை கொடுக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகிது.

கனேடியத் தூதுவர் எரிக்வோல்ஸ் அண்மையில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ரவிஹரனைச் சந்தித்த புகைப்படத்தை முன்பக்கத்தில் பிரசுரித்த ஆங்கிலப்பத்திரிகையொன்று, பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவின் அறிக்கைக்கு ஆதாரமாக சில விடயங்களைக் காட்டியுள்ளது

சர்வகட்சி மாநாட்டை கூட்டி அதிகாரப்பகிர்வுக்கான ஆயத்தங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்யும் இந்தச் சூழலில், ஜுலைக்கலவரம் குறித்த கனடாவின் கண்டன அறிக்கை, நிலைமைகளை பூதாகரமாக்கியுள்ளன. பொலிஸ் அதிகாரமூடாக மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கும் முயற்சியில்தான் சர்வகட்சி மாநாடு கூட்டப்படுகிறது. இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ரணில் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சாத்தியமானாலும், சாத்தயமற்றுப்போயினும் இவ்வாறான முயற்சியில் ஈடுபட்டதற்கான ஆதாரத்தை காட்டுவதுதான் ரணிலின் திட்டமாக இருக்கலாம். இதற்குள், கனடாவின் கண்டனம், அறிக்கை என்பவற்றால் குளிர்காய்வதற்கு செல்வாக்கிழந்த சிங்கள சகத்திகள் முயற்சிப்பதாகவே கருதப்படுகிறது. கனடாவில் இலங்கைத தமிழர்கள் அடைந்து வரும் பலம், பௌத்த தேசத்தின் ஆளுமைக்கு ஆபத்தாக அமையலாம்.

எனவே, வௌிநாடுகளின் பிடிக்குள் அகப்படாத ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய தேவைக்குள் சிங்கள தேசம் திணிக்கப்பட்டுள்ளதாகவும் சரத்வீரசேகர, உதய கம்மம்பில மற்றும் இதுபோன்ற பேரினவாதப் பிரியர்கள் தென்னிலங்கையில் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

மறுபுறம், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலி ருந்து விலகி, ரணிடன் இணையவுள்ள தென்னிலங்கை எம்.பிக்களை சங்கடப்படுத்தும் நோக்கிலும் இந்தப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படலாம்.

குருந்தூர்மலை ஒருகாரலத்தில் புலிகளின் முன்னரங்க காவல் அரணாக இருந்ததாக இலங்கை கடற்படையின் பிரதான அதிகாரியாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர கூறியுள்ள கருத்துக்கள் கனடா மீண்டும் புலிகளை உயிரூட்டுவதான அர்த்தத்தை தென்னிலங்கைக்கு ஞாபகமூட்டுவதாக உள்ளது.

Join Our WhatsApp Group