‘யாழ் நிலா’ அதி சொகுசு ரயில் சேவை ஆகஸ்ட் 04 ஆம் திகதி முதல் ஆரம்பம்

17

நாட்டின் வடக்கு பகுதியை மையமாக கொண்டு கல்கிஸ்சையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ‘யாழ் நிலா’  எனும் அதி சொகுசு புதிய ரயில் சேவையொன்று எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வார இறுதிகளில் செயற்படவுள்ள இந்த புகையிரத சேவையானது, வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணிக்கு கல்கிஸ்சை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை சென்றடையும் என்றும், காங்கேசன்துறையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 6 மணிக்கு கல்கிஸ்ஸை ரயில் நிலையத்தை வந்தடையும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த அதி சொகுசு ரயிலில் உணவகங்கள் உள்ளிட்ட சகல வசதிகளும் உள்ளதாகவும், ரயிலின் டிக்கெட்டுகளை முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.  

‘யாழ் நிலா’ ரயிலில் முதல் வகுப்பு ஆசனமொன்றுக்கு 4000 ரூபாவும், இரண்டாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 3000 ரூபாவும் கட்டணம் அறவிடப்படவுள்ளதுடன், மூன்றாம் வகுப்பு ஆசனமொன்றுக்கு 2000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

இந்த ரயில் சேவை நல்லூர் திருவிழாவை இலக்காகக் கொண்டு எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் தினமும் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Join Our WhatsApp Group