இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மேலும் 7,000 விசாக்களை கொரிய அரசாங்கம் வழங்கவுள்ளது.
புதிய கொரிய தூதுவர் திருமதி மியோன் லீ மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையே அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இது தெரியவந்துள்ளது.
கொரியாவில் தற்போது 25,000 இலங்கைத் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த எண்ணிக்கை 32,000 ஆக உயர்த்தப்படும் என்றும் தூதுவர் கூறினார்.
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை விரைவாக நிறைவு செய்வதற்கு மேலதிகமாக சில புதிய அபிவிருத்தித் திட்டங்களில் தமது நாடு செயற்படும் என தூதுவர் தெரிவித்தார்.
பருவகால விவசாயத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு தூதுவரிடம் பிரதமர் வலியுறுத்தினார், மேலும் கோரிக்கையை தனது அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.
நீர் சுத்திகரிப்பு, சுகாதாரம், கழிவுநீரை அகற்றும் அமைப்புகள் மற்றும் உலர் வலய விவசாயம் தொடர்பான திட்டங்களுக்கு உதவுமாறு பிரதமரின் கோரிக்கையை பரிசீலிக்க தூதுவர் ஒப்புக்கொண்டார்.
கலாச்சார மற்றும் மத உறவுகள், கல்வி பரிமாற்றங்கள் மற்றும் மக்களிடையேயான உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கும் அவர் பணியாற்றுவார் என்று கூறினார்.