வெளிமுகப்பணவனுப்பல்கள் தொடர்பான மட்டுப்பாடுகளில் தளர்வு – நிதியமைச்சு நடவடிக்கை

14

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செலாவணிச்சந்தையில் அவதானிக்கப்படும் முன்னேற்றங்களைக் கருத்திற்கொண்டு, வெளிமுகப்பணவனுப்பல்கள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த மட்டுப்பாடுகள் நிதியமைச்சினால் தளர்த்தப்பட்டுள்ளன.

அந்நியச்செலாவணி வீதம் மீதான அழுத்தத்தினைக் குறைத்து, நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டைப் பேணும் நோக்கில் 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச்சட்டத்தின் பிரகாரம் 2020 பெப்ரவரி 2 ஆம் திகதியிலிருந்து சில வெளிமுகப்பணவனுப்பல்களைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அல்லது மட்டுப்படுத்துவதற்கான உத்தரவு நிதியமைச்சரால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செலாவணிச்சந்தையில் தற்போது அவதானிக்கப்படும் மற்றும் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்களைக் கருத்திற்கொண்டு, சர்வதேச கொடுக்கல், வாங்கல்களை மேலும் இலகுபடுத்தும் நோக்கில் மேற்குறிப்பிட்ட மட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான புதிய கட்டளை நிதியமைச்சரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி முதல் எதிர்வரும் 6 மாதங்களுக்கு அமுலில் இருக்குமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இப்புதிய கட்டளையின் பிரகாரம் புலம்பெயர்ந்தோரின் நடைமுறை மாற்றல்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருப்பதுடன், மூலதனக் கொடுக்கல் வாங்கல்களுக்கான வெளிமுகப்பணவனுப்பல்கள் மீதான சில மட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட கட்டளையில் உள்ள இவை தவிர்ந்த ஏனைய மட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

இதுகுறித்த மேலதிக தகவல்களை www.dfe.lk என்ற வெளிநாட்டுச்செலாவணித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் பார்வையிடமுடியும். 

Join Our WhatsApp Group