சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட இ.போ.ச பஸ்கள் திருத்தப்பட்டு மீண்டும் சேவையில் இணைப்பு (படங்கள்)

18

நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பிலான நிதி நெருக்கடி என்பன காரணமாக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 175 பேரூந்துகள் பழுதுபார்க்கப்பட்டு மீண்டும் பயணிகள் போக்குவரத்து சேவையில் இணைப்பது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பான ஆவணங்களை ஜனாதிபதியிடம் கையளித்தார். மூன்று வருடங்களுக்கு மேலாக சேவையில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த 852 பேரூந்துகளில், 400 பேரூந்துகளை பழுதுபார்க்கும் வேலைத்திட்டம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் பணிப்புரைக்கமைய திறைசேரி ஒதுக்கீட்டின் கீழ் டிப்போக்கள் மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் கீழ் திருத்தப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட 175 பேரூந்துகள், நேற்று கையளிக்கப்பட்டதுடன் இதற்காக சுமார் 300 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. இலங்கை போக்குவரத்து சபையின் தொழில்நுட்ப பிரிவின் பொறியியலாளர்கள் மற்றும் தொழிநுட்ப நிபுணர்களின் பங்களிப்புடன் இந்தத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று கையளிக்கப்பட்ட 175 பேரூந்துகளில் 15 பேரூந்துகள் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துக்காக “சிசு செரிய” வேலைத்திட்டத்திற்கும், மற்றைய பேருந்துகள் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்காக அந்தந்த டிப்போக்களுக்கு ஒப்படைக்கப்படும்.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் எஸ்.எம்.டி.எல்.கே டி அல்விஸ்,பிரதான நிறைவேற்று அதிகாரி மகேஷ் குலதிலக, பிரதி பொது முகாமையாளர் பண்டுக சுவர்ணஹங்ஸ, பிரதம இயந்திரவியல் பொறியியலாளர் லக்ஷ்மன் புஷ்பகுமார ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Join Our WhatsApp Group