கிரீமியாவில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் தலைநகரில் ரஷிய படைகள் அதிரடி

13

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியது.
உக்ரைன் தலைநகர் கிவ்வில் இன்று அதிகாலை ரஷிய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
கிவ்:

உக்ரைன்-ரஷியா இடையேயான போர் நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷிய படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்துகிறது.

சமீபத்தில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவில் பாலம் மற்றும் ஆயுத கிடங்கு மீது ஆளில்லா விமானம் (டிரோன்) தாக்குதல் நடத்தப்பட்டன.

அதே போல் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் டிரோன் தாக்குதலை உக்ரைன் நடத்தியது.

இதற்கிடையே ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கிரீமியா மற்றும் மாஸ்கோ நகரம் மீது நடந்த உக்ரைனின் டிரோன் தாக்குதலை சர்வதேச அமைப்புகள் கண்டிக்க வேண்டும். உக்ரைனின் செயல்கள் பதற்றங்களை அதிகரிக்க செய்யும். இந்த சூழ்நிலையை மேற்கத்திய நாடுகள் தூண்டி விடுகின்றன. இதனால் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை எங்களது தரப்புக்கு உள்ளது என்று தெரிவித்தது.
இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கிவ்வில் இன்று அதிகாலை ரஷிய படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தியது. கிவ்வின் புறநகர் பகுதிகளில் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். தாக்குதல் தொடர்பான எச்சரிக்கை ஒலி தொடர்ந்து எழுப்பப்பட்டு இருந்தது.

இதனால் மக்கள் பீதியடைந்தனர். ரஷியாவின் வான்வழி தாக்குதலை முறியடிக்கும் நடவடிக்கையில் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன என்று உக்ரைன் தெரிவித்தது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

கிரீமியா மற்றும் மாஸ்கோவில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷியா இன்று தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.

Join Our WhatsApp Group