பிடல் காஸ்ட்ரோவால் கியூபாவைக் கட்டியெழுப்பியது போன்று இடதுசாரிகளின் காலாவதியான சித்தாந்தங்களினால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என எவரேனும் நினைத்தால் அது மாயையே என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கார்ல் மார்க்ஸ், லெனின், பிரடெரிக் ஏங்கல்ஸ் போன்ற அரசியல் தலைவர்களை பின்பற்றுகின்ற அரசியல் கட்சிகளால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்றும், காலாவதியான கருத்துக்கள் மற்றும் வாதங்களைத் தழுவிக்கொண்டு ஒரு நாடு முன்னேற முடியாது என்பதற்கு உலகில் பல உதாரணங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
கண்டி சஹஸ் உயனவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கண்டி மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரணவக்க மேலும் கூறுகையில், “கியூபா வீழ்ந்ததும் காஸ்ட்ரோவின் மகளும் நாட்டை விட்டு ஓடிவிட்டார். சோவியத் யூனியனும் கியூபாவும் அமெரிக்க சதியால் வீழ்ந்துவிடவில்லை. இடதுசாரி கட்சிகளால் நாடுகளை உருவாக்கவோ, கட்டியெழுப்பவோ முடியாது. கலை, இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப முடியாது. புரட்சிக்கு முன், சோவியத் யூனியனில் சிறந்த விஞ்ஞானிகளும் இலக்கிய வல்லுனர்களும் பிறந்தனர்.
புரட்சிக்குப் பிறகு, அத்தகைய பெரியவர்கள் உருவாகவில்லை. “சோவியத் யூனியன் கலைக்கப்பட்டபோது கோர்பச்சேவ் ஆற்றிய உரையில் மார்க்ஸ் மற்றும் லெனினை முன்னிறுத்தியவர்களுக்கு நினைவூட்டுகிறேன். அவர்கள், ‘உலகிலேயே மிகப்பெரிய ராணுவத்தை உருவாக்கினோம். நாங்களும் விண்வெளிக்குச் சென்றோம். நமது சித்தாந்தத்தைப் பரப்ப பலகோடி பணம் செலவிடப்பட்டது. ஆனால் எங்களால் டூத் பிரஷ் அல்லது டூத் பேஸ்டை தயாரிக்க முடியவில்லை.’ என்று சிலர் மார்க்ஸ் குழுவிற்கோ அல்லது லெனின் குழுவிற்கோ மாற்றிக் கொடுக்கலாம் என்கிறார்கள். அப்படிச் செய்தால், அடுத்த மூன்று தலைமுறைக்குப் பிறகும் நாம் அதையே சொல்ல வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.