விண்ணப்பதாரர்கள் முறையான நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியதன் காரணமாக, ஆன்லைன் கடவுச்சீட்டு முறையானது பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கைரேகைகளை முறையாகப் பதிவு செய்யாமை, பயோடேட்டா தகவல்களை முறையாகச் சமர்ப்பிக்கத் தவறியமை, இணையத்தளத்தில் பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமை ஆகியன அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளாகும் என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய சுட்டிக்காட்டினார்.
ஆன்லைன் கடவுச்சீட்டு முறையின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்ட 35,000 விண்ணப்பங்களில், திணைக்களத்தினால் தற்போது 3,700 கடவுச்சீட்டுக்களை மட்டுமே வழங்க முடியும் என இலுக்பிட்டிய குறிப்பிட்டார்.
பொதுமக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அல்லது சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களை தொடர்பு கொண்டு பிழைகளை திருத்திக் கொள்ளுமாறும், அதன் பின்னர் இணையவழி கடவுச்சீட்டுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
ஆன்லைன் கடவுச்சீட்டு முறை தொடர்பான அனைத்து தேவையான விவரங்களையும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.