அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்போம், வெறும் அரசியலாக கருதினால் வெளியேறிவிடுவோம் : சஜித்

17

ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமது கட்சி பங்கேற்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிபில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேச நலன் கருதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளோம் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், இந்த கூட்டத்தை வெறும் அரசியல் நடவடிக்கையாகக் கருதினால், தனது கட்சி உடனடியாக வெளியேறும் என்றார்.

இதேவேளை, சர்வகட்சி கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரல் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும், உத்தேச கூட்டத்திற்கு முன்னர் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, சர்வகட்சி கூட்டத்தில் தமது கட்சி பங்கேற்காது என நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தி பங்கேற்காது என அந்தக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுயைாக தமது ஆதரவை வழங்குமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள மக்களின் பிரச்சினைகளை முற்போக்காக காணும் ஒரு கட்சி என்ற அடிப்படையில் அதிகாரப் பகிர்வை கட்டம் கட்டமாக மேற்கொள்ள நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்பதுடன், நாளைய தினம் கூட்டத்திலும் கலந்துகொள்வோம் என்றார்.

இதேவேளை, அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்படி, நாளைய தினம் அனைத்து கட்சி தலைவர்களினது கூட்டம் இடம்பெறவுள்ளதுடன், அதற்கான அழைப்பிதழ்கள் சகல தரப்பினருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Join Our WhatsApp Group