“ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளில் சுமார் 50 விழுக்காட்டை உக்ரேன் மீட்டுக்கொண்டுள்ளது”

14

ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளில் சுமார் 50 விழுக்காட்டை உக்ரேன் மீண்டும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்ட்டனி பிளிங்கன் (Antony Blinken) கூறியுள்ளார்.

ரஷ்யாவின் தற்காப்பு நடவடிக்கைகள் வலுவாக இருப்பதால், கீவ் (Kyiv), கூடுதல் பகுதிகளை மீட்பதற்குக் கடும் போராட்டத்தைச் சந்திப்பதாகவும் திரு பிளிங்கன் சொன்னார். CNN செய்தி நிறுவனத்துடனான நேர்காணலில் அவர் அந்த விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

மேலும் சில மாதங்களுக்கு இருதரப்புக்கும் இடையிலான போராட்டம் தொடரும் என நம்புவதாகவும் திரு பிளிங்கன் கூறினார்.கீவ், ஆகாயத் தற்காப்பை வலுப்படுத்த, அமெரிக்க போர் விமானத்தைக் கேட்டுள்ளது. எனினும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான பயிற்சிகளைப் பெற மாதக் கணக்காகலாம் என்றார் திரு பிளிங்கன்.சில நாள்களுக்கு முன்னர், மூத்த அதிகாரிகள், உக்ரேனுக்கு, இந்த ஆண்டிறுதிக்குள் அமெரிக்கப் போர் விமானங்கள் வழங்கப்படலாம் என்றனர்.

அப்போது, விமானங்கள் அறிவார்ந்த முறையில், முறையான பயிற்சி பெற்று பயன்படுத்தப்படுவது அவசியம் என்றும் திரு பிளிங்கன் வலியுறுத்தினார். ரொமேனியாவில் அதற்கான பயிற்சி நிலையம் அமைக்கப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.அடுத்த மாதம் டென்மார்க்கில், போர் விமானப் பயிற்சிகள் உக்ரேனிய மாலுமிகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.11 நாடுகளைச் சேர்ந்த கூட்டணி அந்தப் பயிற்சிகளை வழங்கும்.

Join Our WhatsApp Group