டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை படைத்தது இந்திய அணி

24

டிரினிடட்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக (12.2 ஓவர்) 100 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியை வீழ்த்தியது.

இதையடுத்து 2 டெஸ்ட் போட்டி கடந்த 20ம் தேதி தொடக்கி நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய முதல் இன்னிங்சில் 438 ரன்களை குவித்தது. விராட் கோலி தனது 500வது சர்வதேச போட்டியில் 121 ரன்கள் குவித்து அசத்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணி 255 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதையடுத்து 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி டெஸ்ட் போட்டியை போல் இல்லாமல் டி20 போட்டியை போல் அதிரடியாக விளையாடியது. 12.2 ஓவர்களில் 100 ரன்களை குவித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

இதற்குமுன் 2001ல் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில், இலங்கை அணி 13.2 ஓவரில் 100 ரன்களை விளாசி சாதனை படைத்திருந்தது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் 38(30) ரன்களும், ரோஹித் 57(44) ரன்களும், கில் 29*(37) ரன்களும், இஷான் கிஷன் 52*(34) ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. 289 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தின் கடைசி நாளான இன்று வெஸ்ட்இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.

Join Our WhatsApp Group