தமிழ்மொழிக் கல்வி கற்றலை ஊக்குவிக்கும் விதத்தில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், அரசாங்க இடைநிலைப்பள்ளிகளில் அது கூடுதல் பாடமாகப் போதிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.அதன் தொடர்பில் மலேசியக் கல்வி அமைச்சருடன் தாம் பேசவிருப்பதாகத் திரு.அன்வார் சொன்னார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலுள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற 11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் திரு.அன்வார் பேசினார்.குறைந்தபட்சம் 15 மாணவர்கள் இருந்தால் மட்டுமே இடைநிலைப்பள்ளிகளில் தமிழ்மொழியைக் கற்பிக்கமுடியும் என்ற விதிமுறை உள்ளது.அந்த எண்ணிக்கையை 10க்குக் குறைப்பது பற்றிக் கல்வி அமைச்சிடம் கலந்தாலோசிக்கப்படும் என்றார் திரு. அன்வார்.
அதேவேளையில் மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுத் துறைக்கு 2 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதி அளிக்கப்படுவதாகவும் திரு.அன்வார் அறிவித்தார்.