இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை சதொச ஊடாக 35 ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த முட்டைகளை எதிர்வரும் வாரத்தில் சதொச ஊடாக விற்பனை செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக விலங்குத்தீவன இறக்குமதி பாதிக்கப்பட்ட நிலையில் முட்டை உற்பத்தி பாரியளவில் வீழ்ச்சிகண்டது.
தொடர்ந்து நாட்டில் முட்டைக்கான கேள்வி அதிகரித்ததுடன், முட்டையின் விலையும் ஒருபோதும் இல்லாதவகையில் உச்சத்தை தொட்டது.
இந்த நிலையிலேயே, இந்தியாவில் இருந்து முட்டையினை இறக்குமதி செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன், முதற்கட்டமாக 20 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்து சந்தைக்கு விநியோகிப்பதாக அரசாங்கம் அறிவித்தது.
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 35 ரூபா முதல் 40 ரூபா வரை விற்பனை செய்யவதற்கும், அதேபோன்று திரவ முட்டைகளை குறித்த விலைக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இதற்கமைய, அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்த நிலையில் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தையில் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை.
நாட்டில் நிலவும் முட்டைக்கான பற்றாக்குறைக்கு தீர்வுகாணும் வகையில் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட போதும், பெரும்பாலான வர்த்தகர்கள் அதனை பொருட்படுத்தாது அதிக விலையில் முட்டையினை விற்பனை செய்வதனை அவதானிக்க முடிந்தது.
இந்த நிலையிலே, முட்டை விலை அதிகரிப்பினை கருத்தில் கொண்டு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை சதொச மற்றும் பல்பொருள் அங்காடி ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளொன்றுக்கு ஒரு இலட்சம் முட்டைகளை சந்தைக்கு வெளியிடுவதற்கு எதிர்பாப்பதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.