இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு தடை… சூப்பர் மார்க்கெட்டில் குவிந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள்…

15

பாஸ்மதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்வதற்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உலகில் அதிகளவு அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக அரிசி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் எதிர்வரும் காலங்கள் பண்டிகை காலமாகும். எனவே உள்நாட்டில் அரிசிக்கு ஏற்படும் கேள்வியை நிவர்த்தி செய்வதற்காகவே இந்திய மத்திய அரசு “பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்குத் தடை“ விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசின் இந்த அறிவிப்பையடுத்து அமெரிக்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் அரிசிக்கு பெருமளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று அச்சம் பரவியதையடுத்து அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்க மக்கள் முந்தியடித்துக்கொண்டும், நீண்ட வரிசைகளில் நின்றும் அரிசி நுகர்வில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக அங்கு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து அமெரிக்காவில் அரிசி நுகர்வுக்கான கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளது

அவுஸ்திரேலியாவில் கடைகளில் அரிசி இல்லை என்றும், அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டதாகவும் பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

“அரிசி ஏற்றுமதிக்குத் தடை என இந்திய அரசின் அறிவிப்பு வெளியானதுமே இங்கு மக்கள் அதிகளவில் அரிசியை வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் அவுஸ்திரேலியாவில் அரிசி அதிக விலைக்கு விற்கப்படவில்லை.

ஆனால், தற்போது எந்தக் கடையிலும் அரிசி கையிருப்பு இல்லை. அனைத்துமே விற்றுத் தீர்ந்துவிட்டன“ என அந்த செய்தித்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் 300 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் பிரதான உணவு அரிசியாகும். அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. சுமார் 140 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்கிறது.

2022 ஆம் ஆண்டில், உலக அரிசி ஏற்றுமதி 5.54 கோடி தொன்களாக இருந்தது. அதில் 2.22 கோடி தொன்கள் இந்தியாவில் இருந்து மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதில் பாஸ்மதி அல்லாத அரிசி 1.8 கோடி தொன்கள். இந்த 1.8 கோடி டன்னில் 1.03 கோடி டன் வெள்ளை அரிசி ஆகும்.

இதேவேளை ஏற்கனவே கருங்கடல் தானிய ஒப்பந்தத்திலிருந்து ரஷ்யா விலகியதையடுத்து உலகளவில் தானியங்களின் விலைகள் உயர்வடைந்துள்ளது.

இது உலகளவில் பல மில்லியன் மக்களுக்கு பசி மற்றும் மோசமான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் இந்த தடை மேலும் உலக நாடுகளை நெருக்கடிக்குள் தள்ளுவதோடு, உணவுப் பாதுகாப்பின்மைக்கு வித்திடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோதுமை, சர்க்கரை ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு இந்தியா தடை விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group