13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரேரணையை விரைவில் கூட்டப்படவுள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்பிக்கவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தில் இணைந்திருந்த நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், NDTV க்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் குறித்த நேர்காணலில் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது,
“பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கும் இடையிலான இருதரப்பு சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கது. இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் புதுப்பிக்கும். இந்த விஜயம் இலங்கையின் வளர்ச்சிக்கு பெரிதும் பயனுடையதாக இருக்கும்.
பொருளாதார நெருக்கடி, தொற்றுநோய் மற்றும் பல பிரச்சினைகளை இலங்கை சந்தித்திருந்த தருணத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதுபிக்கத்தக ஆற்றல் மற்றும் பால்வளம் உள்ளிட்ட விடயங்களில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அதேபோன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், இரு நாடுகளுக்கும் இடையே இணைப்பை வலுப்படுத்தும் வகையில் படகு சேவையை ஆரம்பித்தல் மற்றும் விமான சேவைகளை விரிவுப்படுத்துவது குறித்து அறிவித்தார்.
13ஆவது திருத்தம் அதன் சாராம்சத்தில் இன அடிப்படையிலானது அல்ல. இது தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம்களை அடிப்படையாகக் கொண்டதல்ல. இது இன மோதலை முடிவுக்குக் கொண்டுவர எங்களுக்கு இந்தியாவால் வழங்கப்பட்ட ஜனநாயகத்தின் ஒரு கருவியாகும்.
13ஆவது திருத்தம் அனைத்து மாகாணங்களுக்கும் சுயாட்சியை வழங்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான தனது பிரேரணையை ஜனாதிபதி வடக்கு, கிழக்கு கட்சிகளுக்கு வழங்கியுள்ளார். விரைவில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஜனாதிபதி கூட்டி, அதனை நடைமுறைப்படுத்தும் முன்மொழிவை சமர்பிப்பார்“ என்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் மோடி கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில்,
“13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தி தமிழ் மக்களை இலங்கையில் மாரியாதையாக இலங்கை வாழ வைக்கும் என தாம் நம்புகிறேன்“ என பிரதமர் மோடி கருத்து வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.