தமிழ் தரப்பினரிடம் ஜனாதிபதி ரணில் வெளிப்படுத்திய திட்டத்திற்கு பிரதமர் மோடி வரவேற்பு – அமைச்சர் டக்ளஸ்

33

நடைமுறைச் சாத்தியமான முறையில் மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்தினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்று இருப்பதுடன் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை நேற்று மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் குறித்த பயணத்தில் இணைந்து கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய பிரதமரினால் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், இலங்கையின் அரசியல் சூழலை நன்கு புரிந்து வைத்துள்ள இந்தியப் பிரதமர், தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தாத வகையில் அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டமான மாகாணசபை முறைமையை அமுல்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருக்கும் திட்டத்தில் காணப்படும் நியாயத்தினை ஏற்றுக்கொண்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி செல்வதன் மூலமே தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும் என்று வலியுறுத்தி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்த 3 கட்டங்களாக மாகாண சபை முறையை அமுல்ப்படுத்துவது சாத்தியமான வழிமுறை எனவும் வலியுறுததி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Join Our WhatsApp Group