டெஸ்ட்டில் 29வது சதம் விளாசிய விராட் கோஹ்லி நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் அளித்த பேட்டி: நான் களம் இறங்கியபோது அவர்கள் நல்ல பகுதிகளில் பந்துவீசினார்கள். அதனால் நான் எனது நேரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது.
இந்தியாவுக்காக 500 போட்டிகளில் விளையாடியதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இதனை நான் கற்பனைகூட செய்ததில்லை. இது எல்லாம் கடினமான வேலை. விளையாடும் விளையாட்டுக்கு நீங்கள் கொடுக்கும் அர்ப்பணிப்புதான் பலனைத் தருகிறது. 5 ஆண்டுகளுக்கு பின் வெளிநாட்டில் சதம் அடித்திருப்பது பற்றி நான் பேசத் தேவையில்லை. நான் மொத்தமாக 15 சதம் வெளிநாடுகளில் விளாசி இருக்கிறேன்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், இந்திய மண்ணை விடவும் அதிக சதங்களை வெளிநாடுகளிலேயே விளாசி இருக்கிறேன்.
உடற்தகுதி எனக்கு மிகவும் முக்கியமானது, அது எனக்கு சிறந்து விளங்க உதவுகிறது. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க், வெஸ்ட்இண்டீசில் உள்ள ஆன்டிகுவா மற்றும் போர்ட் ஆஃப் ஸ்பெயின் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்த மைதானங்கள்.
நான் அணிக்கு பங்களிக்க விரும்புகிறேன், நான் 50 ரன்னில் அவுட் ஆகி இருந்தால் சதத்தை விட்டதாகவும், 120 ரன்னில் அவுட்டால் இரட்டை சதத்தை தவறவிட்டதாகவும் பேசுவார்கள். இந்த 15 ஆண்டுகளில், ரெக்கார்ட்ஸ், மைல்கல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததே இல்லை. எனது பேட்டிங் மூலம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தினேன் என்பதே அனைவருக்கும் நினைவில் இருக்கும். எனவே இந்த புள்ளிவிவரங்கள் மற்றும் மைல்கல் எனக்கு முக்கியமில்லை. அணி வெல்வதுதான் முக்கியம், என்றார்.