மின்சாரக் கட்டணம் அதிகரித்த போதிலும், இலங்கை மின்சார சபை இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 2979 கோடி ரூபாய் (இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஒன்பது கோடி) நட்டத்தைச் சந்தித்துள்ளதாக நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் நிதி நிலை அறிக்கை தெரிவிக்கிறது.
மின் கட்டணங்கள் அதிகரித்துள்ள போதிலும், தாமதக் கட்டணங்கள் அதிகரித்ததாலும், உற்பத்திச் செலவில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை முழுமையாக ஈடுகட்டத் தவறியதாலும் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட இலங்கை மின்சார சபையின் மூலதனத் தேவைகளுக்கான நிதிச் செலவு 2326 கோடி ரூபாயாக (இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்து ஆறு கோடி) அதிகரித்துள்ளதாகவும், வங்கிக் கடன் வட்டி விகிதங்கள் அதிகரித்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரியின் விலை அதிகரித்ததன் விளைவாக நேரடி உற்பத்திச் செலவும் 55 வீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மின்சாரத் தேவை 4935 கிகாவாட் மணிநேரத்திலிருந்து 4516 கிகாவாட் மணிநேரமாக 22 வீதத்தால் குறைந்துள்ளது.
மேலும், இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்த வருமானம் 18 ஆயிரத்து 11 கோடி ரூபாய் (பதினெட்டாயிரத்து பதினொரு கோடி) என வருடத்தின் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.