சிங்கப்பூருடன் கடைப்பிடித்த வெற்றிகரமான அணுகுமுறையைப் போன்று, நமது நாட்டிற்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு தடையற்ற வணிக பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில் எதிர்பார்க்கப்படும் ஏற்பாடுகளுடன், இந்திய ரூபாயை இலங்கையில் செல்லுபடியாகும் நாணயமாக ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்தியாவிற்கு இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இரண்டு நாள் உத்தியோகபூர்வ இந்திய விஜயம் மற்றும் இந்தியா-இலங்கை பொருளாதார பங்காளித்துவத்தின் தொலைநோக்குப் பார்வை குறித்து இன்று (22) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் சப்ரி இதனைத் தெரிவித்தார்.
உலகின் மிகப் பெரிய வளர்ந்து வரும் பொருளாதாரப் பிராந்தியமான இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று உலகில் எந்தவொரு நாடும் தனித்து முன்னேற முடியாது, உலகில் உள்ள அனைத்து அபிவிருத்தியடைந்த நாடுகளும் பிராந்திய பங்காளித்துவத்தின் ஊடாக முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்திய – இலங்கை உறவுகளை அபிவிருத்தி செய்து இலங்கையின் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே ஜனாதிபதியின் வேலைத்திட்டமாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
நாட்டை அச்சுறுத்தும் எதையும் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் செய்யமாட்டார்கள் என வலியுறுத்திய அமைச்சர், அந்த செயற்பாடுகளை சகல தரப்பினரின் பூரண புரிந்துணர்வுடனும் இணக்கப்பாட்டுடனும் செயற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.