எல்லை தாண்டி சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்ததாக தெரிவித்து அண்மையில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களை இலங்கை அரசு இன்று விடுதலை செய்துள்ளது.
சட்டவிரோத முறையில் மீன்பிடியில் ஈடுப்பட்டதாக தெரிவித்து இலங்கை கடற்படையினர் கடந்த 8 ஆம் திகதியன்று இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரையும், அவர்களது இழுவை படகுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து குறித்த மீனவர்கள் மீது எல்லை தாண்டி சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று இவ்வழக்கு மீதான விசாரணைகள் இடம்பெற்றது.
இதன்போது, “இலங்கை கடற்பரப்பிற்குள் தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர் நிகழ்வாகவே பதிவாகி வருகின்றன.அதேபோல் இலங்கை அரசால் தடை செய்யப்பட்டுள்ள இழு வலையை கொண்டே இவர்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
இது தொடர்ச்சியாக நடைபெற்றாலும், மனிதாபிமான அடிப்படையில் இன்று இவர்களை விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது“.
இதேவேளை, விடுவிக்கப்பட்ட 15 மீனவர்களும் மீண்டும் இதே குற்றச்சாட்டில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஒரு வருடம் முதல் மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடம் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இந்திய பிரதமர் மோடியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சந்தித்த வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.