பழந்தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழறிஞர் ஜி.யு.போப்பிற்குக் கனடாவில் சிலை

15

திருக்குறள், திருவாசகம், நாலடியார் உள்ளிட்ட பல தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழறிஞர் ஜி.யு.போப் பிறந்த கனடாவில் அவருக்குச் சிலை திறக்கப்பட்டுள்ளது.சென்ற சனிக்கிழமை (15 ஜூலை) பிரின்ஸ் எட்வெர்ட் தீவின் பெடெக் நகரத்தில் உள்ள அந்தச் உருவச்சிலை திறக்கப்பட்டது.தமிழ் அறிஞர் ஒருவருக்காக வட அமெரிக்காவில் நிறுவப்பட்டுள்ள முதல் நினைவுச்சின்னம் அது.

ஜி.யு.போப் என தமிழர்களால் அறியப்பட்ட ஜோர்ஜ் உக்லோ போப், 1820ஆம் ஆண்டு பெடெக் நகரில் பிறந்தார். அவர் 18ஆவது வயதில் தமிழ் கற்கத் தொடங்கினார்.இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு மேல் சேவையாற்றியபின் 1881இல் இங்கிலாந்து திரும்பிய திரு. போப், அங்குள்ள ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிப்பெரும் புகழ் பெற்றார்.ஜி.யு.போப் அவர்களின் 200ஆவது பிறந்தநாளை நினைவுகூரவும் தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பை அங்கீகரிக்கவும் 2020ஆம் ஆண்டு அவருக்கு நினைவுச்சின்னம் அமைக்க கனடியத் தமிழர் பேரவை முடிவு செய்தது.

கொரோனா கிருமித்தொற்றால் அந்தப் பணிகள் தாமதமாயின.அமைப்பின் முன்னாள் தலைவரும் நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்தின் தலைவருமான திரு. சிவன் இளங்கோ ‘செய்தி’ நிருபர் ஐஸ்வர்யாவிடம் பேசியபோது,“தமிழர்களுக்கும் கனடாவுக்குமான தொடர்பு 200 ஆண்டுகளுக்கு முன்பு ஜி.யு.போப் பிறந்தபோதே தொடங்கிவிட்டது. தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரது உருவச் சிலை நிறுவியதை எண்ணி நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம். அது ஜி.யு.போப் அவர்களின் தமிழ்ப் பணியைக் கனடாவில் வசிக்கும் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கொண்டு சேர்க்கும் என்று நம்புகிறோம்”என்றார்.பெடெக் நகரத்தில் அமைந்துள்ள வரலாற்று அருங்காட்சியகத்தில் ஜி.யு.போப்பின் படைப்புகள் குறித்த பதிவுகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

அவரது இன்னொரு சிலையும் திறந்து வைக்கப்பட்டது.சிலை திறப்பு விழாவில் பேசிய ஜி.யு.போப் அவர்களின் எள்ளுப் பேரன் (Great great grandson) மால்கம் ப்ரோஸ்,“உயர் கல்வி வரை மட்டுமே படித்த ஜி.யு.போப் தமிழ் மொழி மீது கொண்ட பேரார்வத்தால் தமிழைக் கற்றுத் தேர்ந்து தனது வாழ்நாளின் கடைசி 20 ஆண்டுகளையும் தமிழ் மொழியை பயிற்றுவிப்பதிலேயே செலவிட்டார். இந்தச் சிலை திறப்புநிகழ்வால் நாங்கள் அனைவரும் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். ஜி.யு.போப்பின் கதை நாடுகள், கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பைக் காட்டுகிறது”,என்று கூறினார்.

இறுதி நிகழ்வாக, ஜி.யு.போப் மொழிபெயர்த்தவற்றுள் 5 குறட்பாக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வாசிக்கப்பட்டன. இந்தியாவுக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான கனடாவில் இதுபோன்ற முன்னெடுப்புகள் மொழிப்பற்றை நிலைநாட்ட உதவும் என்று நம்பப்படுகிறது.

Join Our WhatsApp Group