இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க, இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கின்றார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று பிற்பகல் இந்தியாவை சென்றடைந்தார்.
இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரை நேற்று மாலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான சந்திப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் டாக்டர்.எஸ் ஜெய்சங்கர் தனது டுவிட்டர் பக்கத்திலும் இது தொடர்பில் தெரிவித்திருந்தார்.
இரு நாடுகளும் இந்த ஆண்டு தூதரக உறவுகளை ஸ்தாபித்ததன் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி விக்ரமசிங்க, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும், பிரதமர் நரேந்திர மோடியுடன் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு பதவியேற்ற பிறகு அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். முன்மொழியப்பட்ட கிரிட் இணைப்பு இருதரப்பு உறவுகளில் ஒரு முக்கிய படியாகும். முன்னதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, 2030ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் தேசிய மின் கட்டங்களும் இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஜனாதிபதியின் வருகைக்கு முன்னதாக இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும், இந்தியா ஏற்கனவே எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முற்பட்டுள்ளதுடன் பொருளாதார நெருக்கடியின் போது, நாணய பரிமாற்றம், பணம் செலுத்துவதை ஒத்திவைத்தல் மற்றும் எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான கடன் வரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.