2023ல் 211 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைப் பெற்றுள்ளது

59

இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கை முதலீட்டு சபை 211 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும், ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட முதலீட்டுத் திட்டங்களில் 682 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகள், இலங்கை முதலீட்டு சபை அங்கீகாரம் வழங்கக் கூடிய நிலையில் இருப்பதாகவும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு என்ற வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும், அதேபோன்று பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதோடு, ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித்தார்.

நமது நாட்டில் முதலீடு செய்யும்போது நீண்டகாலமாக பின்பற்றப்பட்டுவரும் சட்டக் கட்டமைப்பை திருத்த வேண்டியுள்ளதோடு, முதலீட்டாளர்கள் எளிதாக முதலீடு செய்வதற்கான பின்னணியை உருவாக்க வேண்டும். மேலும், இந்த நாட்டுக்கு வரும் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளின் உரிமையைப் பெறுவதில்லை. இதற்கு ஒரு தீர்வாக, அவர்களின் முதலீட்டு உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வகையில் நமது சட்டக் கட்டமைப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் திலும் அமுனுகம,

இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து வகையான முதலீட்டையும் உள்ளடக்கும் வகையில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இந்த சட்டங்களைக் கொண்டுவரும் போது, ஏனைய அரச நிறுவனங்களின் தற்போதைய சட்டங்கள் பாதிக்கப்படாத வகையில் அவர்களுடன் கலந்தாலோசித்து இந்த சட்டங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், முதலீடுகளுக்குத் தடைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ள தற்போதைய சட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக 07 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இது முதலீட்டாளர்களுக்கு குறுகிய, இடைக்கால மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நேரடி முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், முதலீட்டாளர்களைக் கவரக்கூடிய வகையில் கொள்கை ரீதியிலான பல்வேறு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

நாம் இந்தியா, பங்களாதேஷ், வியட்நாம் போன்ற நாடுகளுடன் போட்டியிட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Join Our WhatsApp Group