குணா -ceylonsri
ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தில் முதலிடம் பெறப்போவது அரசியலா? அல்லது பொருளாதாரமா?. அரசாங்கத்தை பொறுத்த வரையில்,இவையிரணடும் இரட்டைச் சக்கரங்கள்.இந்நிலையில், எதை தவிர்த்து, எதை முன்னிலைப்படுத்துவது என்ற தெரிவில் பாரிய குழப்பம் நிலவுகிறது. இந்தக் குழப்பகரமான சூழலில் தான், ரணிலின் இந்திய விஜயம் அமைந்துள்ளது.
உக்ரைன், ரஷ்ய போரினால் எழுந்துள்ள சர்வதேச சவால்களை வைத்து இந்தியா வகுக்கும் வியூகங்க ளுக்கு இலங்கை பலியாகப்போகிறதா? காற்றாலை மின்சாரத்துக்கான ஒப்பந்தம், வடக்கின் ஒரு பகுதியை இந்தியாவின் பிராந்தியமாக்குமா? இந்தியா இலங்கைக் கிடையிலான கப்பற் சேவை வர்த்தகக் கொடுக்கல் வாங்கலை இலகுவாக்கி இந்திய ரூபாவை முன்னிலைப்படுத்துமா? இந்தக் கேள்விகளால் இன்று தென்னிலங்கையே அரசியல் அதிர்வலை களுக்குள் திண்டாடி நிற்கிறது.
இந்த அதிர்வுகளை அமைதியாக்கும் அரசியல் காய்நகர்த்தல்களை ரணில் நகர்த்தாமலும் இல்லை. இந்திய மத்திய அரசுக்கு தலையிடியைத் தரும் எவ்வித நகர்வுக்கும், தென்னிலங்கையைத் தூண்டிவிடும் எத்தகைய செயற்பாடுகளுக்கும் அவர் தயாரில்லை என்பதை, அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் குறித்த அவரது பதில்கள் காட்டியுள்ளன. வடக்கு, கிழக்கை இணைக்க மஹிந்த ராஜக்ஷ விரும்பியிருக்கலாம். ஆனால், நான் விரும்பப் போவதில்லை எனக் கூறியுள்ளார் ரணில். இதில் இரு விடயங்கள் உள்ளன. ராஜபக்ஷக்களின் அரசியலுடன் தனக்கு உடன்பாடில்லை என்பது ஒன்று,வடகிழக்கு இணைப்பால் திராவிட மாநிலங்களின் அகண்ட தமிழக கோரிக்கையை உயிரூட்டி புதுடில்லியை சங்கடத்தில் ஆழ்த்த விரும்பவில்லை என்பது மற்றொன்று.
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை பிராந்தியப் பிடியாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது.இதனால், யூரோ, டொலர், ரூபிள் யுவான் மற்றும் யென் போன்ற சர்வதேச நாணயங்களின் தரத்துக்கு இந்திய ரூபாவை கொண்டு வரும் விருப்பில் புதுடில்லியுள்ளது.
எரிபொருள் மற்றும் எரிவாயுக் கொள்வனவுகளின் கொடுக்கல் வாங்கல்களில் ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகள் டொலர், யூரோவை தவிர்த்துள்ளன. இது, சர்வதேச சந்தைப்புழக்கத்திலிருந்து இந்நாணயங்களின் கேள்வியை குறைத்துள்ளமை குறிப்பிடத்க்கது.இதுபோன்று தெற்காசிய நாடுகளின் பொதுப்பாவனைக்கு இந்திய ரூபாவை அறிமுகமாக்கும் வௌ்ளோட்டம் இலங்கையுடன் ஏற்படுத்தப்படலாம்.
ஜனாதிபதி ரன்னிலின் இந்திய விஜயம், சர்வதேச ரீதியில் நோக்கப்படுகின்ற விஜயமாக இருந்தாலும், இது நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான சர்வதேச வியாபாரங்களில் இந்திய நாணயத்தை பயன்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்படுமானால், இன்றைய நெருக்கடி நிலையில் இலங்கைக்கும் சாதகமான ஒரு நிலையாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. நெருக்கடி நிலை உச்சத்தில் இருந்த போது இந்தியா வழங்கிய பாரிய ஒத்துழைப்பை இலங்கை மக்கள் என்றுமே மறப்பதற்கு இல்லை.
நாளை புது டெல்லியில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எதிர்பார்ப்பு, வீண் போகாது என்பதுதான் ராஜதந்திரிகளின் கருத்தாக இருக்கிறது. இந்தியாவோடு நாளை செய்து கொள்ளப்பட இருக்கின்ற பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், இலங்கையின் அபிவிருத்திக்கு பாரிய உந்து சக்தியாக இருக்கும் என்று இலங்கை நம்புகிறது. அதே நேரம், இந்தியாவும் தனது தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாத வகையில், உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகிறது. ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவின் இந்திய விஜயம், இலங்கையின் பொருளாதாரத்திற்கும் வளர்ச்சிக்கும் மேலும் வழி வகுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும்.