இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ வெளியானது. இந்த சம்பவத்திற்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர் கட்சி தலைவர்கள் மணிப்பூர் மாநில அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “தெய்வம் என்பார் பெண்களை;
தேவி என்பார் பூமியை;
கடவுளின் பாகம் என்பார்
பார்வதியை
நடைமுறையில்
உடல் உரிப்பு செய்து
ஊர்வலம் விடுவார்
நம் தலையில் அல்ல
காட்டுமிராண்டிகளின்
தலையில் அடிக்க வேண்டும்
அநியாயங்களை நிறுத்துங்கள்;
அதிகாரம் உள்ளவர்கள்
களமிறங்குங்கள்
இன்னும் மணிப்பூர்
இந்தியாவில்தான் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.