பொது மக்களுக்கு ஆபத்து: நிர்மாணப் பணிகள் கைவிடப்பட்டுள்ள கொழும்பு க்ரிஷ் கட்டிடம்

100

நிர்மாணப் பணிகள் கைவிடப்பட்டுள்ள கொழும்பு க்ரிஷ் கட்டடம் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பு அமைச்சு மற்றும் அரசாங்கத்துக்குக் காணப்படுவதால் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கினார். இதன்போது இராஜாங்க அமைச்சர்களான கௌரவ தேனுக விதானகமகே மற்றும் கௌரவ அருந்திக்க பர்னாந்து ஆகியோரும் கலந்துகொண்டனர்.

க்ரிஷ் கட்டட நிர்மாணத் தளத்தில் பொருத்தப்பட்டுள்ள நிர்மாண உபகரணங்கள் காற்றுக்கு விழக்கூடிய அபாயம் உள்ளதாகவும், நீர் தேங்கி நிற்பதால் நுளம்பு பெருகக்கூடிய நிலைமை உருவெடுத்துள்ளதாவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. விசேடமாக, இந்தக் கட்டடத்தின் மூன்று மாடிகள் பூமியின் மட்டத்திலிருந்து கீழே காணப்படுவதால், அதில் மழை நீர் தேங்கி நின்று டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அதனை அண்மித்திருக்கும் பிரதான சுற்றுலா ஹோட்டல்களிலிருந்து முறைப்பாடுகள் வந்திருப்பதாகவும் அதிகாரில் இதன்போது தெரிவித்தனர்.

அதற்கமைய, இந்த முதலீட்டாளருடன் கலந்துரையாடி குறிப்பிட்ட காலக்கெடுவொன்றுக்குகள் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தவறும் படச்சத்தில் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை விரைவாக எடுக்குமாறும் அமைச்சர் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார். நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் முதலீட்டாளருடன் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதற்கு மேலதிகமாக, உள்ளூராட்சி நிறுவனத்தை தொடர்புபடுத்தாமல் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டு கம்பஹா சங்கபோதி கல்லூரிக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத்திட்டம் இடையில் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த வீடுகளுக்கு பாதை வசதிகள், நீர் வழங்கல், கழிவு முகாமைத்துவம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் முறையாக வழங்கப்படவில்லை என இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

விசேட வேலைத்திட்டமாக அனுமதி வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் உரிய தரங்களுக்கு அமைய மேற்கொள்ளப்படவில்லை என்பதால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தத் திட்டம் தொடர்பில் கடந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலும் கலந்துரையாடப்பட்யிருந்தாலும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை தொடர்பில் அமைச்சர் அதிருப்தியை வெளியிட்டார். அதற்கமைய, இது தொரப்பில் விரைவாக நடவடிக்கை எடுத்து இரண்டு வாரங்களில் குழுவுக்கு அறிக்கை வழங்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ கோகிலா குணவர்தன, கௌரவ மிலான் ஜயதிலக்க மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோரும் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Join Our WhatsApp Group