இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடம் 13வது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க கோரி, வட கிழக்கு சிவில் சமூக பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கான மகஜர் ஒன்றினை யாழ் இந்திய துணைதூதுவரகத்தில் நேற்று (17) கையளித்தனர்
சிவில் சமூக உறுப்பினர்கள் வடக்கு,கிழக்கு மாகாணங்கள்
12 July 2023
பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி
சௌத் புளொக்,
புதுடில்லி — 110011
மக்களின் மகஜர்
மேன்மைதகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களுக்கு,
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் சிவில் சமூக உறுப்பினர்களாகிய நாம் பின்வரும் அக்கறைகளை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம்.
முதலாவதாக, இலங்கை மக்கள் எதிர்நோக்கிய இடர்பாடுகளை தணிப்பதற்கு பெரிதும் தேவைப்பட்ட நிதி மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்குவதில் இந்திய அரசாங்கம் கடந்த 16 மாதங்களாக வெளிக்காட்டிய பேரளவு ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நாம் நன்றி கூறுகிறோம்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உட்கட்டமைப்புக்களை மீளக்கட்டியெழுப்புவதிலும் யாழ்ப்பாணம் — கொழும்பு ரயில்வே, பலாலி — சென்னை விமானசேவை மற்றும் உத்தேச தமிழ்நாடு — யாழ்ப்பாணம் கப்பல் சேவை போன்ற ஏனைய பயணத்திட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் உங்களது அரசாங்கள் வழங்கிய பெருந்தன்மையான ஆதரவுக்கும் நாம் நன்றியுடையோம். முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டிருக்கும் பல முதலீட்டு செயற்திட்டங்களுடன் சேர்த்து இந்த திட்டங்கள் எல்லாம் முடக்கநிலையில் உள்ள தமிழ் மாகாணங்களின் பொருளாதாரத்தை ஏனைய மாகாணங்களுடன் சேர்த்து மீள்விருத்தி செய்யவும் அவசியமாக தேவைப்படும் தொழில்வாய்ப்புக்களை பெருக்கவும் நிச்சயம் உதவும்.
உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 14 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் எமது மக்களின் சமூக, பொருளாதார நிலைவரங்கள் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று மே்பாட்டைக் காணவில்லை. தவறான பொருளாதார முகாமைத்துவத்தின் விளைவாக சகல இலங்கை மக்களும் எதிர்நோக்குகின்ற இடர்பாடுகளுக்கு மேலதிகமாக தமிழ் மக்கள் கூடுதல் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கிறது. உதாரணமாக,தமிழ் மாகாணங்களில் கல்வித்தரம் விரைவாக வீழ்ச்சிகண்டு வருகிறது.பல்வேறு சாக்குப்போக்குகளின் பேரில் தமிழ் மாகாணங்களில் வளமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதன் விளைவாக விவசாயத்துறையிலும் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றத்தையும் காணமுடியாமல் இருக்கிறது.
மாகாண மட்டத்தில் சகல துறைகளையும் பயனுறுதியுடைய முறையில் திட்டமிட்டு நெறிப்படுத்தி நிருவகிக்க மக்களால் எளிதில் அணுகக்கூடிய தமிழ் நிருவாகம் ஒன்று அவசியமாக தேவைப்படுகிறது என்று பரந்தளவில் மக்களும் பல்வேறு சிவில் சமூக அமைப்புக்களின் முன்னணி உறுப்பினர்களும் உணருகிறார்கள். தற்போதைய நிலையில் வடக்கு,கிழக்கில் மாகாணசபைகள் மக்களால் தெரிவுசெய்யப்படுவதற்கு வகைசெய்வதன் மூலம் மாத்திரமே இதைச் சாத்தியமாக்க முடியும்.
எமது தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் வெறுமனே அரசியல் காரணங்களுக்காக ஐக்கியமின்றி இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானதாகும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேறச் செய்வதற்கு அர்த்தபுஷ்டியான எந்தவொரு செயற்திட்டமும் இந்த தலைமைத்துவங்களிடம் இல்லை. ஆனால் பெரும்பான்மையான மக்கள் மாகாண மட்டத்திலான ஒரு தமிழ் நிருவாகத்தை அவசரமாக வேண்டிநிற்கிறார்கள். போரின் முடிவுக்கு பின்னரான காலகட்டத்தில் நடைபெற்றிருக்கக்கூடிய தேர்தல்களில் 2013 மாகாணசபை தேர்தலில் மாத்திரமே அதிகப்பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாக்களிப்பில் பங்கேற்றார்கள் என்ற உண்மையின் மூலம் இது தெளிவாக வெளிக்காட்டப்பட்டது.
அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தமிழ் மாகாணங்களில் மாகாணசபைகள் செயற்படவைக்கப்படவேண்டும் என்றும் இந்திய அரசாங்கம் இடையறாது வலியுறுத்திவருவதை நாம் முழுமையாக அறிவோம்.
இந்த நிலைப்பாட்டை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் தற்போதைய சந்தர்ப்பத்தில் மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தி விரைவாக மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்துமாறு கேட்கவேண்டும் என்று மிகுந்த சிரத்தையுடன் நாம் தங்களிடம் வேண்டிக்கொள்கிறோம்.-