உலகெங்கிலும் தற்போது தீவிரமான வெப்ப அலைகள் உருவாகியிருக்கின்றன. பூமியின் வெப்பம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஆபத்தான நிலைமை என உலக வானிலை அமைப்பு எச்சரித்து வந்த நிலையில் தற்போது இந்த வெப்பநிலை புதிய உச்சத்தையே தொட்டுள்ளது எனலாம்.
இந்த வெப்ப உச்சம் தற்போது சீனா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் என உலக நாடுகளையே மிரட்டி வருகிறது. ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என பல பகுதிகளில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
வெப்ப அலைகள் மற்றும் காட்டுத் தீ
வடகிழக்கு அமெரிக்காவில் ஏற்பட்ட கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மறுபுறம் மத்திய மேற்கு அமெரிக்காவில் காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் இப்படியொரு வானிலை நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள டெத் வேலி என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 127 பரனைட் வெப்பநிலை பதிவானது. அமெரிக்காவில் கடந்த 90 ஆண்டுகளில் பதிவான உச்ச வெப்பம் இதுவாகும்.
அதேபோல் அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் பகுதியில் கடந்த 18 நாட்களாக 110 பரனைட் வெப்பம் பதிவாகி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் கிழக்கே பல கிராமப்புறங்களில் காட்டுத்தீ வேகமாக பரவியதில் இதுவரை 8,000 ஏக்கர்கள் தீக்கிரையாகி விட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரத்தில் சீனாவின் சான்பாவோ பகுதியில் 125.9 பரனைட் வெப்பம் பதிவானது. இந்த வெப்ப அலை தாக்குதலினால் ஐரோப்பிய நாடுகளிலும் காட்டுத்தீ மிக வேகமாக பரவிவருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் பல இடங்களில் வெப்பம் 118 டிகிரி பரனைட்டாக வெப்பம் பதிவாகியிருந்த நிலையில், இத்தாலியின் 16 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
உலக வானிலை அமைப்பின் எச்சரிக்கை
அதிகரித்த வெப்ப அலைகள் மனித ஆரோக்கியம், பொருளாதாரம், விவசாயம்,நீர் விநியோகங்ள் ஆகியவற்றை தீவிரமாக பாதிக்கும் என உலக வானிலை அமைப்பின் பொதுச்செயலாளர்,பெட்டரி டாலஸ் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், ஜப்பான் முழுவதிலும் ஹீட் ஸ்ட்ரோக் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிக வெப்பத்தின் காரணமாக, மனித உடல் உறுப்புகள் திடீரென்று செயலிழந்து போவதுதான்
‘ஹீட் ஸ்ட்ரோக். இந்த எச்சரிக்கை பிற நாடுகளிலும் வழங்கப்புடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதன் காரணமாக வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது.