ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மீது தொடரப்பட்டுள்ள வழக்கு கடந்த 14 ஆம் திகதி புத்தளம் மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
சாட்சியாளர்கள் தொடர்பான குறுக்கு விசாரணைகளின் பொழுது ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சாட்சியம் வழங்கிய பவ்சான் என்பவர் இன்னுமொரு சாட்சியாளரான மலிக் சொன்னதற்காக தான் பொய் சாட்சிதான் வழங்கினேன் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
புத்தளம் காரைதீவு பகுதியில் இயங்கி வந்த தான் கற்ற மதரஸாவில் ஸஹ்ரான் மற்றும் ரிழ்வான் ஆகியோர் விரிவுரைகளை நடத்தியதாக பவ்சான் இதற்கு முன்னர் சாட்சி வழங்கியிருந்தார்.
சட்டத்தரணி சமிந்த அதுகோரளவின் குறுக்கு விசாரணையில், தான் மதரஸாவில் சஹாரானையோ அல்லது ரில்வானையோ பார்த்ததில்லை என்று பவ்சான் கடந்த 14 ஆம் திகதி ஒப்புக்கொண்டார். ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் பற்றி முன்னர் சொன்ன தன் கருத்துக்கள் பொய்யானவை என்றும் பவ்சான் தெரிவித்துள்ளார்.
தான் மேலே கூறிய தகவல்களை மலிக் என்ற நபர்தான் சி.ஐ.டீ மற்றும் நீதிமன்றத்தில் கூறுவதற்கு தயாராக இருந்தார். தானும் அவரின் வேண்டுகோளுக்கு அமையவே ஹிஜாஸ் ஹிஸ்புல்லா குறித்து பொய் சொன்னதாக பவ்சான் கூறியுள்ளார்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான நளிந்த இந்ததிஸ்ஸ, ஃபர்மன் காசிம், அசித சிறிவர்தன மற்றும் பியுமி செனவிரத்ன ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கு அடுத்த கட்ட விசாரணைகளுக்காக அக்டோபர் 19 மற்றும் 20 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் விசாரணை கண்காணிப்பாளர்கள் இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை விசேட அம்சமாகும்.