லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
லிந்துலை பம்பரகலை நடு பிரிவைச் சேர்ந்த வீரையா மாரியாய் வயது (80) என்பவரே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த பெண் தொழிலாளி ஓய்வு பெற்ற நிலையில் தற்காலிகமாக நாள் சம்பளத்திற்கு கொழுந்து பறித்து வேலை செய்து வந்துள்ளார்.
இவர் நேற்று (17) காலை தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தபோது அங்கு மரத்திலிருந்த குளவிக்கூடொன்று கலைந்து இவரை கொட்டியுள்ளது.
தோட்ட நிர்வாகத்தின் உதவியுடன் அவர் உடனடியாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். சடலம் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.