அரசின் புதிய உரக் கொள்கை: 10 வருடங்களின் பின்சிறுபோகத்தில் 512,000 ஹெக்டெயாரில் பயிர்ச்செய்கை

21

 அதிக அறுவடையைப் பெற்றுக்கொடுக்க உதவிய விவசாயிகளுக்கு கௌரவம்.
 நாடு பூராவும் உயர் தொழில்நுட்ப மாதிரி தோட்டங்கள்.
 2026 ஆம் ஆண்டிளவில் 60 மெட்ரிக் தொன் சோள விளைச்சல்.
 அடுத்த 6 போகங்களில் நெல் விளைச்சல் இரட்டிப்பாக உயரும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய உரக் கொள்கையினால் 10 வருடங்களின் பின்னர் கடந்த சிறுபோகத்தில் ஐந்து இலட்சத்து பன்னிரண்டாயிரம் ஹெக்டெயார் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விவசாயத்தை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் விவசாய தேவையில் 80 வீதத்தை உள்நாட்டு உற்பத்தியிலிருந்து பெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

விவசாயத்தில் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட மரக்கறிகள் மற்றும் பழங்களின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் எனவும், அதன் மூலம் விவசாய பயிர்களின் இறக்குமதியை மட்டுப்படுத்த முடியும் எனவும் விவசாய அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

‘ஒரு வருடகால முன்னேற்றம்’ என்ற தொனிப்பொருளில் இன்று (17) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்த அமரவீர,

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடத்திற்குள் விவசாயிகளின் பிரச்சினைகளை விரைவாக தீர்த்து அவர்களை விவசாய நிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றபோதும் நான் விவசாய அமைச்சைப் பொறுப்பேற்றபோதும் நாட்டில் நிலவிய நிலைமையைச் சொல்ல வேண்டியதில்லை. உரம் வழங்கக் கோரி விவசாயிகள் வீதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் விவசாயத்திலிருந்து தூரமானார்கள். விவசாயிகள் ஆக்ரோசமாக நடந்து கொண்டார்கள். விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் விவசாய நிலங்களை விட்டு வேறு பகுதிகளுக்குச் சென்றனர். சில இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். இவ்வாறானதொரு சூழ்நிலையில் மக்களை மீண்டும் விவசாய நிலங்களுக்குத் திருப்புவது எமக்கு பிரதான சவாலாக இருந்தது. மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது நம்பிக்கை இருக்கவில்லை. குறைந்த பட்சம் இந்த பிரச்சினை குறித்து பேசக்கூட விவசாயிகள் முன்வரவில்லை.

மீண்டும் வயல்களுக்கு செல்ல வேண்டுமாயின் உரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அந்த சமயம் சிறு போகத்தில் 2,75000 ஹெக்டெயாரில் பயிர்செய்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஆனால் 2,12000 ஹெக்டெயாரில் மட்டுமே பயிரிடப்பட்டது. அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்திய கடன் திட்டத்தின் கீழ் 6500 மெற்றிக் தொன் உரத்தை வழங்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் இந்திய கடன் வசதியின் கீழ் உரங்களை வழங்க முடியாது என்பதால் ஓமானில் இருந்து கொண்டு வரப்பட்ட உரம் தான் வழங்கப்பட்டது.

உலக உணவு நெருக்கடி வரப்போவதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், எப்படியாவது விவசாயிகளை விவசாய நிலங்களுக்கு திருப்பி அனுப்ப முடிந்தது. சிறுபோகத்தில் ஓரளவு வெற்றியடைந்த போதிலும் உர நெருக்கடி காரணமாக 8 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய நேரிட்டது. இதன்படி அரசாங்கம் 300 மில்லியன் டொலர் பெறுமதியான அரிசியை இறக்குமதி செய்தது. கால்நடை உணவுக்காக மேலும் 100 மில்லியன் செலவிடப்பட்டது. பெரும்போகத்தில் திட்டமிட்ட விளைச்சல் பெற விவசாயிகளுக்கு யூரியா மற்றும் MOP உரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான எரிபொருள் மற்றும் நிதி மானியம் வழங்கப்பட்டது. சேதனப் பசளை மற்றும் ஏனைய உரங்களைப் பெற விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்பட்டது. வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட பணத்திற்கு மேலதிகமாக மேலும் பெருமளவு நிதியை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.

தற்போது சிறுபோகம் தொடங்கியுள்ளது. மூன்று போகங்களுக்கு பின், TSP உரம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது மட்டுமன்றி புதிதாக இறக்குமதி செய்யப்படும் யூரியா உரம் 9000 ரூபாவிற்கு வழங்கப்படுகிறது. MOP உரம்பெற ஒரு ஹெக்டெயாருக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள வவுச்சர் வழங்கப்படுகிறது. விவசாயிகள் எதிர்பார்த்திருக்காத அளவு மானியங்கள் கிடைத்துள்ளது.அவர்கள் இலவச உரம் கேட்கவில்லை. ஆனால் தற்போதைய நிலைமையில் இருந்து மீள அதிக உதவிகள் வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இருக்கிறார்.

எமது நாட்டின் விவசாயத்துறையை சர்வதேச மட்டத்திற்கு மேம்படுத்த முடியும். அதனை செய்வது கடிமான விடயமும் அல்ல. விவசாயத்துறைக்கு புதிய தொழில்நுட்பத்தை புகுத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கு பல தடைகள் வரலாம். இருப்பினும் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக விவசாயத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கக் கூடிய அனைத்துச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும். இந்தச் செயற்பாடுகளின் போது அரசியல் களத்திற்கு உள்ளேயும் வெளியிலும் பலவிதமான விமர்சனங்கள் வரக்கூடும். இறக்குமதி செய்யப்பட்ட உர வகைகள் தரமற்றவை என்றும், விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

விவசாயிகளை திசைத்திருப்பும் முயற்சிகளிலும் குறைவில்லை. இருப்பினும் அவற்றை பொருட்படுத்தாமல் விவசாயிகள் வயல் நிலங்களுக்கு திரும்பியுள்ளனர். தற்போது நாம் விவசாய சேவைகள் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றோம். அதன் பின்னர் தற்போது விளைவிக்கப்படும் விளைச்சல்களுக்கு மாறாக புதிய விளைச்சல்களை மேற்கொள்ளும் போது சலுகைகளை வழங்க முடியும். நெல் விளைச்சலில் இலாபம் ஈட்ட முடியாத பகுதிகளும் உள்ளன. அவர்களுக்கு வேறு விளைச்சல்கள் ஊடாக உதவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இங்கு வேறு விளைச்சல்களை மேற்கொள்ளும் போது அவர்களுக்கு அதிக இலாபம் கிட்டும்.

ஜனாதிபதி இந்நாட்டை பொறுப்பேற்கத் தவறியிருந்தால் விவசாயிகள் விளைச்சல் நிலங்களுக்குச் சென்றிருக்க மாட்டார்கள். பலர் தற்கொலை செய்துகொண்டிருப்பார்கள். அத்தோடு உணவற்ற தேசமாகவும் நாடு மாறியிருக்கும்.

ஒரு வருடத்திற்கு முன்னர் ஜனாதிபதி இந்நாட்டினை பொறுப்பேற்றுக்கொண்ட போது 90 சதவீதமாக காணப்பட்ட உணவுத் தட்டுப்பாடு, தற்போது 4.1 சதவீதமாக குறைவடைந்துள்ளது. நாட்டின் விவசாய துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உணவுத் தேவையை பூர்த்தி செய்த விவசாயிகளுக்கு அனைவரும் நன்றி கூற வேண்டும். அத்தோடு விவசாயிகள் மீண்டும் விளைச்சல் செயற்பாடுகளை ஆரம்பித்தமையின் காரணமாக 400 மில்லியன் டொலர்கள் நாட்டில் எஞ்சியுள்ளது.

நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக விவசாயத்துறையை நவீனமயப்படுத்தும் செயற்பாடுகளுக்கான செயலகம் ஒன்றை ஜனாதிபதி செயலகத்தில் நிறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுரை வழங்கியிருந்தார். உப பிரிவுகள் எதிர்கொள்ளும் பலவிதமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதே மேற்படி செயலகத்தின் பிரதான பணியாகும். காலத்திற்கு ஏற்ற செயற்பாடுகள் மற்றும் செயல்திறன் மதிப்பீட்டுச் செயற்பாடுகளுடன் விவசாய நவீனமயப்படுத்தலுக்காக ஒவ்வொரு உப பிரிவுகளுக்குமான வரைவுகளை தயாரிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்படி திட்டத்தை சாத்தியப்படுத்திக்கொள்ளும் நோக்கில் விவசாயத்துறையுடன் தொடர்புபடும் அமைச்சுகள் மற்றும் தனியார்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழங்களை இணைத்துக்கொண்டே விவசாயq நவீனமயப்படுத்தலுக்கான செயலகம் நிறுவப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை விவசாயத்தோடு இணைத்து நெல் விளைச்சல், மீன்பிடி, உணவு உற்பத்தித் துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், ஏற்றுமதியை ஊக்குவிப்பதையும் நோக்காக கொண்டு விவசாய நவீனமயப்படுத்தலுக்கான செயலகம் மே மாதம் 31 ஆம் திகதி முதல் அவசியமான பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

நிலையான விவசாய அபிவிருத்தியின் ஊடாக 2048 இல் அபிவிருத்தி அடைந்த இலங்கைக்கு விவசாயத்தின் பங்களிப்பினை பெற்றுக்கொள்ளும் நோக்கில், ஏற்றுமதியை இலக்கு வைத்த விவசாய உற்பத்திகளை மேற்கொள்ளுதல், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல், இளைஞர்களை புதிய தொழில்நுட்பத்துடன் இணைந்த தொழில் முயற்சியாளர்களாக மாற்றுதல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக உரிய வகையில் விவசாயத்துறை நிறுவனங்களை வரையறுப்பதற்காவும் விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்குமான கொள்கைகளை தயாரிக்கும் பணிகள் ருஹுணு பல்கலைக்கழக பேராசிரியர் காமினி சேனாநாயக்கவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த பணிகள் 2023 ஓகஸ்ட் மாதத்தில் நிறைவு செய்யப்படவுள்ளன.

அதேபோல் தற்போது நாட்டின் நெல் உற்பத்தி ஹெக்டெயார் ஒன்றிற்கு 3.7 மெற்றிக் தொன்களாக காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டையில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் பலனாகவும், தரமான விதை பயன்பாட்டினாலும் ஒரு ஹெக்டெயார் பரப்பில் 10.25 மெற்றிக் தொன் அறுவடை செய்ய முடிவதால், தற்போது 3.7 மெற்றிக் தொன்களாக காணப்படும் விளைச்சலை 7.4 மெற்றிக் தொன்களாக அதிகரித்துக்கொள்வதே இலக்காகும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் சோள உற்பத்தி ஹெக்டெயார் ஒன்றுக்கு 3.7 மெற்றிக் தொன்களாக காணப்படுகிறது. அதனை 2026 ஆம் ஆண்டளவில் 60 மெற்றிக் தொன்களாக அதிகரிக்கும் மேலான இலக்கை அடைய வேண்டும் என்பதே எமது இலக்காகும். அதேபோல் மற்றைய விவசாய உற்பத்திகளுக்காக மாகாண சபைகள், ஏனைய அமைச்சுக்கள், மத்திய அரசாங்கம், தனியார் துறை மற்றும் பல்கலைக்கழகங்கள், திணைக்கங்களின் பங்குபற்றலுடன் அனைத்து மாகாணங்களிலும் விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்பு தொடர்பிலான உயர் தொழில்நுட்பவியல் முன்னோடி நிறுவனங்களை நிறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

இந்நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, விவசாய பணிப்பாளர் நாயகம் பீ.மாலதி, விவசாய சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் ஏ.எச்.எம்.எல்.அபேரத்ன, உரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா, தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு
17-07-2023

Join Our WhatsApp Group