வடக்கில் 30 வருட இருண்ட அனுபவம்: பொறுத்துக் கொள்ள முடியாத தெற்கு மக்கள்- யாழ்ப்பாணத்தில் அமைச்சர மனுஷ

74

எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாட்டுடனான 30 வருடகால இருண்ட அனுபவத்தை வடக்கு மக்கள் அனுபவித்தனர். இதே அனுபவங்களை சில காலதிற்கு பொருத்துக்கொள்ள முடியாத தெற்கு மக்கள் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தியது மாத்திரமின்றி வீடுகளையும் பொது சொத்துக்களையும் தீயிட்டுக்கொளுத்தினார்கள்.

கொலையும் செய்தார்கள் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். நல்லிணக்கத்தின் மூலம் வடக்கு மக்களிடையே நல்லுறவை முன்னெடுக்கும் வகையில் யாழ் முற்றவெளி விளையாட்டரங்கில் நடைபெறும் Glocal Fair 2023 கண்காட்சி மற்றும் நடமாடும் சேவையின் இரண்டாம் நாள் நிகழ்வு இன்று (16) காலை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலைமையில் ஆரம்பமானது.

இங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார் இங்குள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. தெற்கிலுள்ளவர்களைப் போன்றே என்னுடன் உரையாடினார்கள். அவர்களது உள்ளங்களை புரிந்துகொள்ள முடிந்தது.அவர்களின் ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் புரிந்துகொண்டேன் இதனால் தான் காலியில் அமைக்க திட்டமிட்டிருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தொழில் பயிற்ச்சி நிலையத்தை யாழ்பாணத்தில் அமைக்க நான் தீர்மானித்தேன் என்றும் அமைச்சர் கூறினார்.

30 வருடகாலம் அனுபவித்த இருண்ட கால அனுபவத்தை வாய்யிட்டு கூற முடியாத போதிலும் அந்த காலப்பகுதியில் வடக்கு மக்கள் தமது மழலைச் செல்வங்களை கல்வியில் மேலோங்கச் செய்தார்கள். இவர்களின் ஆற்றல்களால் கல்வியில் எடுத்துக்காட்டாக விளங்கும் வடக்கு மாணவர்களை தெற்கிலுள்ள நாம் உதாரணமாகக்கொள்ள வேண்டும். இவ்வாறான ஆற்றலை எடுத்துக்காட்டுவற்கு வெளிநாடுகளின் உதாரணங்கள் தேவை இல்லை என்பதை தெற்கிலுள்ளவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர் கல்வித்துறையில் சிறந்து விளங்கும் வடக்கு மாணவர்களை உதாரணமாகக்கொள்ள வேண்டும் என்று எனது பிள்ளைகளுக்கும் அறிவுறுத்தியிருப்பதாக அமைச்சர் கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாடு உணவுப்பொருள் விலை அதிகரிப்பினால் அனுபவித்த சிரமங்களினால் தெற்கு மக்களின் செயற்பாடுகளை மேலும் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆத்திரமடைந்த தென்பகுதி மக்கள் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவைக் கூட விரட்டியடித்தார்களா…. ? அவருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தினார்கள் என்றும் தெரிவித்த அமைச்சர் இவ்வாறான சூழ்நிலையில் வீழ்ச்சி கண்ட நாட்டை மீட்டெடுக்க எவரும் முன்வராத நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை பொறுப்பேற்றார்.

முன்னைய அரசியல்வாதிகளே இனமத ரீதியாக எங்களை பிரித்து பிளவுபட வைத்தனர். ஆனால் தற்போதைய ஜனாதிபதி அனைவரையும் இன மத ரீதியாக ஒன்றிணைத்து நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தி வருகிறார். அவருடன் இணைந்து இதற்கான அர்ப்பணிப்புக்காக நானும் செயல்பட்டுவருகின்றேன் என்றார் அமைச்சர்.

தெற்கைச் சார்ந்திருந்த போதிலும் மீண்டும் ஒரு இருண்டகாலம் எமது நாட்டிற்கு ஏற்படக்கூடாது என்ற இலக்குடன் வடக்கு தெற்கு என்ற வேறுபாடின்றி நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருகின்றேன். நல்லிணக்கம் என்பது வார்த்தைகளில் அடங்கிவிடக்கூடாது என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு அதே இலக்குடனேயே நானும் செயல்பட்டுவருகின்றேன் என்றும் கூறினார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொழில் திணைக்களம் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவு தொழிற்பயிற்சி அதிகார சபை உட்பட தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து நிறுவனங்களும் வடக்கு மக்களுக்கான சேவைகளை இதன்போது வழங்கின். ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை ஆகிவற்றின் கீழான மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

Join Our WhatsApp Group