இந்தியா செல்வதற்கு முன் தமிழ் எம்.பிக்களை சந்திக்கிறார் ஜனாதிபதி: 18 ம் திகதி

24

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

நாளை மறுதினம் (18) பாராளுமன்றத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்காக சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு முன்னதாகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

இதன்போது வடக்கு – கிழக்கை பாதிக்கும் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் இணக்கம் காணக்கூடிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.

குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகள், பாதுகாப்பு தரப்பினரால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் வடக்கில் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

முன்னதாக இந்த விடயங்கள் தொடர்பில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

எனினும் இந்தப் பேச்சுக்கள் பலனளிக்கவில்லை
எனக் கூறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேச்சுவார்த்தையில் இருந்து விலகிக் கொண்டது.

இதேவேளை, இந்திய விஜயத்திற்கு முன்னர் வடக்கு மற்றும் பெருந்தோட்ட தமிழ் அரசியல்வாதிகள் முன்வைக்கும் அரசியல் கோரிக்கைகள் தொடர்பில் பல இணக்கமான நடவடிக்கைகளை உடனடியாக அமுல்படுத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் இருதரப்பு கலந்துரையாடலை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இந்தியாவிற்கு விஜயம் செய்வது இதுவே முதல் முறை என்பதும் விசேட அம்சமாகும்.

Join Our WhatsApp Group