இஸ்ரேல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் துண்டித்த தலையை இஸ்ரேல் மருத்துவர்கள் ஒட்ட வைத்து மருத்துவ உலகில் சாதனை படைத்துள்ளனர். பாலஸ்தீனத்தில் வசிக்கும் 12 வயது சிறுவன் சுலைமான் ஹசன் என்பவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, கார் விபத்தில் சிக்கினார். இதன் காரணமாக அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தலை மண்டை ஓட்டின் அடிப்பகுதி – முதுகுத் தண்டு இடையிலான பகுதி துண்டிக்கப்பட்டது. சிறுவனின் தலையானது தோலால் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தது.
இதுபோன்ற நிலையை அறிவியல் ரீதியாக ‘அட்லாண்டோ-ஆக்ஸிபிடல்’ மூட்டு இடப்பெயர்வு என்று கூறுகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுவன், விமானம் மூலம் இஸ்ரேல் மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுகுறித்து சிறுவனுக்கு சிகிச்சை அளித்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஓஹாட் ஈனாவ், ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ என்ற இதழுக்கு அளித்த பேட்டியில், ‘சிறுவனின் உயிரை காப்பாற்ற பலமணி நேரம் அறுவை சிகிச்சை செய்தோம்.
சிறுவனின் உயிர் பிழைப்புக்கு 50 சதவீத உத்தரவாதம் மட்டுமே என்பதால், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால் அவர் குணமடைந்து வருவது ஒரு அதிசயமாக பார்க்கிறோம். கடந்த மாதம் ஆபரேஷன் நடந்தாலும், ஒரு மாதத்திற்கு பின் தற்போது தான் பொதுவெளியில் தெரிவித்துள்ளோம்’ என்றார். துண்டிக்கப்பட்ட சிறுவனின் தலையை அறுவை சிகிச்சை மூலம் உயிரை காப்பாற்றிய இஸ்ரேல் மருத்துவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.